2. உடன்படிக்கை எழுதிய
படலம்
ஒட்டகத்தை அமைதி
அடையச் செய்தது
ஒட்டகத்தின் போராட்டம்
பாலைக் கடலின் கப்பலெனப்
பாராட் டிடும்ஒட் டகம்ஒன்றைச்
சோலைக் குள்ளே வைத்தொருவர் தொடர்ந்துவேலை செய வைத்தார்
வேலை செய்ய மறுத்தந்த வியன்ஒட் டகமோ மதங்கொண்டு
காலை முதலாய் மாலைவரை கடும்போராட்டம் செய்ததுவே! 1
சாய்த்தது - தொலைத்தது -
கடித்தது
மரத்தைச் செடியைக் கொடியை எலாம் மதம்கொண்டதுவாய்ச் சாய்த்ததுவே
வரத்தைப் பெற்று வந்ததுபோல் வானைத் தாவ முயன்றதுவே
துரத்திப் பிடிக்க வந்தவரைத் தூக்கி எறிந்து தொலைத்ததுவே
அரத்தைப் போலப் பற்களினால் அருகில் சென்றால்
கடித்ததுவே; 2
மூவுலகையும் அழிக்க வந்ததோ!
நான்கு கால்கள் இருந்தாலும் நாலாயிரம் கால் கொண்டதுபோல்
ஊன்றி எழுந்து முன்வருவார் உடலைத் தூக்கி எறிந்தவுடன்
தோன்றும் கடலின் பேயலைபோல் தொடர்ந்து மேலே தாவியதே
மூன்று வையம் தமை ஒருங்கே முன்னே அழிக்க வந்ததுவோ? 3
அஞ்சி அஞ்சி அகன்றனர்
என்று கலங்கி மாந்தரெலாம்
எதிரும் புதிரும் பாய்ந்தோடிக்
கொன்று விடுமே நமை என்று குதித்து வீழ்ந்து காலொடிந்தார்
மென்று விடவும் கூடுமென மிரண்டு குழிக்குள் சிலர் வீழ்ந்தார்
ஒன்று பட்டீங்(கு) அடக்கிடுவோம் உதவு கென்றார்
சிலர் ஆங்கே; 4
முகம்மது முன்னே சென்றார்கள்
கட்டுப் படுத்த முடியாமல் காட்டு வேங்கை போல்அதுவும்
நட்டு வளர்த்த சோலையினில் நாற்றி சையும் புயலைப்போல்
முட்டி மோதி அழித்து வர முயற்சி செய்தோர் எலாம்தங்கள்
முட்டி வலிக்க விரைந்தோடி முகம்மதுமுன்னே வீழ்ந்தார்கள்; 5
|