|
முகம்மதுவுக்கு ஐந்தாண்டு நிரம்பியது.
அன்னையிடன் சேர்ப்போம்
மணிநிகர்த்த முகம்மதுசேய் வயதைந்தும்
மாதமொன்றும் மலர்ந்து நின்றார்
வினைநலத்தார் ஆமினாபால் அழைத்தேகி
அருட்சேயை விடுத்தல் ஒன்றே
அனைவருமே செவிசாய்க்கும் கருத்தாகும்
எனத்தாமே அகத்தால் எண்ணி
இணைபிரியா ஆரிதுநல் அன்பர்முன்
எழில்அலிமா அறிவித்தாரே! 31
மக்காவை நோக்கிப் போகும்போது
அறிவித்த படியேநல் அன்புநெஞ்சர்
அகம்மதுவை அழைத்துக் கொண்டு
செறிவுள்ள கானகமும் கன்மலையும்
காட்டாறும் சிறக்கத் தாண்டி
நெறியெல்லாம் தோன்றுகிற இடையூற்றின்
விளைவுகளை நீக்கி நல்ல
குறிக்கோளர் வாழுகிற மக்காவை
நோக்கியவர் குறுகுங் காலை; 32
ஒளியுடைய ஒரு கைமட்டும் தோன்றியது
எவ்வெவரின் கருத்துக்கும் கண்ணுக்கும்
பொருத்தமுற எட்டா வண்ணம்
செவ்வணம்ஓர் கைதோன்றி வரக்கண்ட
சிறுபோதில் சிறிய சேயும்
அவ்வணமே மறைந்துவிடக் கண்டாரே
அன்றியவர் சேயும் கையும்
எவ்வண்ணம் மறைந்ததென அறியஒணா
அலிமாவோ இடிந்து போனார்; 33
|