கொழுத்தே இருந்தேன் - இளைத்து
விட்டேன்
உழைத்துழைத்தே உருக்குலைந்தேன் ஓய்வும் இன்றி நடைதளர்ந்தேன்
கொழுத்த மேனி உருவந்தான் கொண்டேன் எனினும் எலும்பானேன்
இழைக்கும் கவிதை புனைபுலவர் இளைத்தோர்க் கெனையே உவமித்தார்
பிழைக்கும் பிறர்க்கா என்பெற்றோர் பெருமை யோடும்
பெற்றளித்தார்? 12
செல்லாக் காசாய் ஆகி
விட்டேன்
வாயில் லாத விலங்கென்பார் வாடி வதங்கச் செய்கின்றார்
நோயில் லாமல் வாழ்பவர்கள் நூறாயிரத்தில் ஒருவர்தாம்
காயில்லாமல் கனியில்லை கடுஞ்சுமையே வைத்தாலும்
சேய்அந் நாளில் உழைத்திந்நாள் செல்லாக் காசாய்
ஆனேனாம்; 13
முதுமையும் இளைப்பும்
எங்களுக்கும் உண்டு
எனக்கும் முதுமை வருமலவோ? இளைப்பும் இறைப்பும் உண்டலவோ?
கணக்கு வழக்கே இல்லாமல் கடினச் சுமைமேல் ஏற்றுவதோ?
தனக்குத் தவிப்பொன்றுற்றால் தான் தம்பிக் கெல்லாம்தெரியும்என்பார்
வினைக்கே ஏற்ற படிஉணவும் விளைப்ப தில்லை
எனக்கவரே! 14
நான் வாழ்வதே வீணாம்
சோம்பல் மிகுந்து விட்டேனாம் சுறுசுறுப்பின்றிக் கெட்டேனாம்
சாம்பி ணத்துக் கீடாம்நான் சரியாய் உழைக்க மாட்டேனாம்
ஆம்பணத்துக் கெனினும்எனை ஆரும் வாங்க மறுப்பாராம்
வீம்புக் கெனையே வளர்த்தாராம் வீணே என்றன்
வாழ்க்கையாம்; 15
பாராட்டியதே கிடையாது
இன்னா செய்யா நன்னெறியே எவரும் விரும்பும் நெறியன்றோ?
தன்னோய் போலப் பிறர் நோயைத் தாங்கிப் பார்க்கும் பண்பன்றோ?
புன்னோய் தீர்த்துப் புவிகாக்கும் புகழாம் இதனை
உணராமல்
பன்னாள் வதைத்துப் பழிக்கின்றார் பாராட்டுரையோ
என்றுமிலை; 16
என்னை வெட்டிக் கொல்ல
நினைத்துள்ளார்
கட்டிக் கட்டிச் சுமையேற்றிக் காசு வாங்கிப் பிழைத்த அவர்
வெட்டிக் கொன்று கறியாக்கி விலைக்கு விற்க முயல்கின்றார்
ஒட்டி உணர்ந்தேன் அவர்உணர்வை ஒட்டாரத்தால் இதுசெய்தேன்
மட்டித் தனமாய் இலைஎன்று மகம்மது முனம் அதுசொல்ல; 17
|