நெடுங்கடலும் நீர்மை
குன்றும்
நெடிய கடலும் தன்னீர்மை நிலைத்துக் குன்றும் பெருமலையின்
முடிமா முகிலும் படியாமல் முறைதான் மாறிப் பொய்த்துவிடின்
இடியும் இடிசெய் மின்னொளியும் இணங்கி வந்து பொழிந்திலதேல்
கொடிய மண்ணே எனக்கூறும் கொள்கை தானே நிலையாகும். 24
அல்லாவே மழை தருக!
என்றார் மண்ணை வென்றாள
எழிலாய் வந்த முகம்மதுவே
சென்றார் இறைவன் புகழோடும் சிந்தனையால் ஒன்றானார்
கொன்றால் அன்ன கொடுமையினும் கொடிதே ஐயா மழையின்மை
நன்றாள் கின்ற ஆண்டவனே நல்க வேண்டும் மழை
என்றார்; 25
மதினாவைச் செழிக்க
வைப்பீர்
“ஒளியே! ஒளியின் உட்சுடரே! உறைவான் வெளியின் ஓவியமே!
வளியே! புனலே! அனலேமண் வகையே! மனத்தின் உள்ளுணர்வே
ஒளியா உண்மைப் பொருளே! எம் உயிரே! உணர்வே! உள்மனத்தின்
தெளிவே! மதினா தெளிவடையச் சிறக்கப் பொழிக மழை!”
என்றார்; 26
மழை பெருகியது
அண்ணல் பெருமான் தொழுகையினால் அருவான் இறைவன் அருள்ஓங்கி
வண்ண மாக வானமெலாம் வளர்மா முகிலும் கருவாகி
மின்னும் இடியும் உருவாகி மேனி சிலிர்க்கக்
குளிராகித்
தண்ணார் மழையும் பெருகிவரத் தரைமேல் மண்ணும்
உருகியதே! 27
மழை கட்டுக்கு அடங்காமல்
பெய்தது
கட்டுப் பட்ட வானத்தின்
கண்கள் திறந்து கொண்டதுபோல்
கொட்டுகின்ற மழைச்சாரல் கூடிக் கொண்டே
இருந்திடவும்
எட்டு நாள்கள் இவ்வாறே இடைவிடாது பெய்ததனால்
கெட்டோம் கெட்டோம் எனக்கதறிக் கிளர்மதினத்தார்
கலங்கினரே! 28
இனியும் பெய்தால்
பிழைக்க மாட்டோம்
திறந்து விட்ட பெரியோரே!
திரும்ப மூட வேண்டுமெனப்
பறந்து வந்து மக்களெலாம் பகர்ந்தார் ஐயன் திருமுன்னே
புரந்து விட்டீர் ஐயாவே! போதும் போதும் மழை” என்றார்
இறந்து படுவோம் இனிஒரு நாள் ஈங்கே பெய்தால்” எனச் சொன்னார். 29
|