கெடுப்பதும் மழையே
எடுப்பதும் மழையே
பெய்யாக் கெடுக்கும்
மழையேதான் பெய்தும் கெடுக்கும் என்பார்கள்
ஐயா அதுபோல் இம்மழையும் அதிகம் பெய்து கெடுக்கிறதே
உய்யும் நெறியே தெரியாமல் ஓடி வந்தோம் காத்திடுவீர்
பெய்யும் மழையை நிறுத்து கெனப் பெருமான் முன்னர்
அழுதாரே! 30
மழைப் பொழிவு நின்றது
போதும் போதும் எனும் வகையில் பொருந்தப் பெய்த வான்மழையே
ஏதும் தீமை செய்யாமல் இன்னே நின்று நலம்தருக
ஈதல் மழையே இன்னுயிரை இனிதாய்க் காக்க” எனச் சொன்னார்
ஆதலாலே அம்மழையும் அந்தப் போழ்தே நின்றதுவே! 31
மக்கள் மகிழ்ந்தனர்
பொழியச் செய்த பெருமழையைப் புவியை அழிக்க வாராமல்
ஒழிவாய் என்று சொன்னவுடன் ஒழிந்த மழையின் நிலைதன்னை
விழியால் கண்ட அன்பர்கள் வெற்றி வீரர் முகம்மதுவின்
வழியே சிறந்த வழிஎன்னும் வாய்மை கூறிப் போனார்கள்; 32
ஒரு முதியோர் கண்ணற்றவர்
கண்ணில் பார்வை அற்றவராய்க் கவலை கொண்டார் ஒருமுதியோர்
மண்ணில் தெரியும் இரவுபகல் மாற்றம் ஏதும் அறியாமல்
விண்ணின் இறைவன் தன் முறையின் விளைவேஎன்ற கருத்தினொடு
புண்ணில் தோய்ந்த விழிகொண்டு புவியில் வாழ்ந்து வருநாளில்; 33
இறைவனின் தூதரிடம் சென்றார்
அளவில்லாத அருளாளன் அன்பே உருவாம் இறையவனின்
வளமேம் பட்ட தூதுவராய் வந்துள் ளார்கள் என அறிந்தே
உளமெல் லாம்நன் மகிழ்வெய்தி ஒளியார் முன்னே சென்றிரந்தால்
நலமெல் லாம்யான் பெறுவன்என நாடிப் போனார்
நாட்டமிலார்; 34
அருள் வைத்துப் பார்வை தருக
தன்னேர் இல்லா இப்புவியைத்
தாங்க வந்த பெருமானே!
என்னேர் உள்ளீர் என்றாலும் இயல்பாய்க் காண விழியற்றேன்
கல்நேர் உள்ளம் கொண்டார்முன் கரைகா ணாத துன்புற்றேன்
மன்னா! என்மேல் அருள்வைத்து மலர்க்கண் ஒளியைத் தருக!
என்றே. 35
|