பக்கம் எண் :

418துரை-மாலிறையன்

வாழ்வை வெறுத்தான்

தோலில் சுருக்கம் மிகக் கொண்டு தொடவும் அஞ்சும் நிலையவனாய்
வாலில் லாத தேவாங்கு வகையில் ஒன்றின் நிலைபெற்றால்
போலிங் குலவி வருநாளில் பொல்லா நோயின் தீமையொடு
மேலுக் கிங்கே வாழ்வதனால் மேன்மை இல்லை எனஎண்ணி; 42

தோழனிடம் தன் நிலையைக் கூறி அனுப்பினான்

உற்ற நண்பன் ஒருவனிடம் உறுநோய் எல்லாம் தெரிவித்தே
அற்றார்க் கிரங்கும் அருள்வள்ளல் அகம்மது ஒளியார் முன்சென்று
பொற்றாள் வணங்கிப் புகன்றிடுவாய் பொய்வாழ்க் கையேன் நிலை என்றான்
சொற்றான் சொன்ன சொல் கேட்டுச் சொல்லச் சென்றான் மற்றவனே! 43

ஐய! என் நண்பன் நோயுற்றான்

உருகி வந்தார் தமக்கெல்லாம் உதவி புரியும் அருள் வள்ளால்!
பெருகும் அன்பே பொருந்திய என் பிழைஇல்லாத நட்புடையான்
அருகில் செலவும் அஞ்சுகிற அளவில் பிணியால் வருந்துகிறான்
தெருவில் திரியும் நாய்கூடத் தெம்பாய் இருக்கும் ஈங்கெனினும்; 44

தாங்களே நோய் தீர்க்க வேண்டும்

அந்தோ பாவம்! மெய்யெல்லாம் அரிப்புச் சொறிதான் புண்சீழும்
சிந்தும் குருதி தன்னோடு சிறுமைப்பட்டுச் சாகின்றான்
எந்த நாள்தான் நலம் பெறலோ என்றே எண்ணி வருந்துகிறோம்
எந்தை நீரே அன்னவனின் இழிநோய் போக்க வேண்டுமென்றான். 45

முகம்மது மண்ணெச்சில் தந்தார்

அன்பால் ஏங்கும் நண்பனவன் அருமை தனையும் புண்ணோயால்
இன்பம் குன்றி இருப்பவனின் இயல்பு தனையும் மனத்தெண்ணிப்
பண்பால் கொஞ்சம் மண்ணள்ளிப் பரிவாய் எச்சில் உமிழ்ந்ததனில்;
“நண்பா இதனைக் கொடுபோய்நீ நல்கி அருந்தச் செய்”கென்றார். 46

தம்பீ! இதைக் குடி என்றார்

நம்பிக் கையே குறையாமல் நல்லோன் அதனை வாங்கியுடன்
வெம்பிக் கையற் றேங்கி மனம் வேகும் நண்பன் தன்பால் போய்ச்
செம்பொன் மேனி முகம்மதுவின் சிறப்பை எல்லாம் புகழ்ந்தேத்தித்
தம்பீ! இதனைக் குடி என்றான் தன்கைம் மண்தன் கரைசலையே! 47