நோய் நீங்கியது
வானில் இருந்து வந்தஒரு வகையாம் மருந்தைப் பெற்றதுபோல்
தீனில் நாட்டம் கொண்டவனாய்த் தீநோய் உற்றோன் அதுபெற்றுத்
தேனைக் குடிக்கும் செயலது போல் திகழ்மா நபியார் தந்ததனை
வானை வாழ்த்திக் குடித்தவுடன் வளர்பேரின்பம்
அதுகொண்டான்; 48
அழகு உருவம் பெற்றான்
புண்ணும் சொறியும் அகன்றதுகாண் பொலிவும் அழகும் மிகுந்ததுகாண்
கண்ணும் ஒளியே கொண்டதுகாண் கலையும் எழிலும் வந்ததுகாண்
வண்ணக் கைகால் அத்தனையும் வலிமை பெற்றுத் திகழ்ந்ததுகாண்
அண்ணல் பெருமான் நபி அருளால் அருநோய் கொண்டான்
அழகுற்றான். 49
ஒரு பெண் வந்து கூறினாள்
அண்ணல் நபிமுன் ஆங்கொருநாள் அவுலா என்னும் ஒரு நங்கை
பண்ணார் அவர்தம் புகழ்கூறிப் பணிந்து வந்தாள், “மன்னவரே!
தண்ணார் நெஞ்சத்து அவசுதமைத் தணியா விருப்பால் மணந்திருந்தேன்
வண்ண முறவே இருவேமும் வாழ்ந்து சிறந்து மகிழ்ந்திருந்தோம். 50
என்னை என்கணவர் வெறுக்கின்றார்
நில்லா இளமை நீங்கியது நெடும்பே ரழகும் மாறியது
பொல்லா உடலும் பொலிவின்றிப் போன தாலே என்கணவர்
செல்லாக் காசாய் எனைஎண்ணிச் சீச்சீ என்று வெறுக்கின்ற
புல்லா எட்டிக் காய்எனவே புன்மைச் சொல்லால் ஏசுகிறார்? 51
சிறு பகையே பெரிதாகி
விட்டது
பொறுத்தேன் எல்லாம் என்றாலும் பொருந்தா வகையில் என்கணவர்
“வெறுத்தேன்” எனவே எனைக்கூறி விரும்பா வகையில் “தாய்” எனவே
மறுத்தும் மறுத்தும் உரைத்திட்டார் மனத்தால் பிரிந்து விடும்வகையில்
சிறுத்த பகைதான் பெருத்ததனால் சேர்ந்து வாழ இலை
இந்நாள்; 52
குடும்பத்தைக் கவனிப்பதே
இல்லை
பெற்ற சேய்கள் சென்றாலும்
பேணிப் பார்க்கும் செயலில்லை
குற்ற மில்லா தவற்றை எலாம் குற்றமாகக் கொள்கின்றார்
உற்ற வறுமை அதனாலே உறுநோய் கொண்ட பிள்ளைகளை
முற்ற வெறுக்கும் பண்பினராய் முழுதும் மாறி இருக்கின்றார். 53
|