பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்421


உன்னால் இயலாது என அறிந்து உதவினேன்

“பணமும் இல்லை உன்னிடத்தில் பாவம், நன்றாய் நோன்பு செயக்
கணவனுக்கும் வலிமையில்லை. கழுவாய் தேட இரவலர்க்கே
உணவு தரவும் வழியில்லை உணர்ந்தேன் அதனால் கனிதந்தேன்
இணைஇல்லாத இவை கொண்டே இரவலர்க்கே ஈ” என்றார். 60

அப்பெண் தன் பாவம் தீர்ந்தாள்

தாயே என்று சொன்ன அவன் தவற்றைப் போக்கப் பெருங்கருணைத்
தாயே ஆன பெருமாட்டி தமிழர்கால வள்ளல்போல்
ஆய கனியே இரவலர்கள் ஆறுபத்துப் பேருக்கு
நேய முடனே அளித்துப்பின் நெருங்கி வாழ்ந்தாள் துணையோடே! 61

பகைவர்கள் எதிர்க்க வருகின்றார்

புதையில் இபுனு வரக்காவு பொதுவாய் இருந்த நன்மனிதர்
இதயத் தூய்மை உள்ளவராய் இனியோர் நபியார் முன்வந்து
“முதல்வன் தூத! மக்காவின் முழுதும் தீயன் துவையு அவற்(கு)
உதவும் ஆமி றென்பவனும் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டார்கள்; 62

நீர் கிடைக்காத படி கேணிகளைக் காக்கின்றனர்

தூய்மை செய்ய நீர் வேண்டித் தோண்டி வைத்த கேணிகளைத்
தீமை நெஞ்சால் காக்கின்றார் செம்மால்! உம்மைத் தாக்கிடவும்
வாய்மை இல்லார் முயன்றிங்கே வாகை சூட நினைக்கின்றார்
நேயமற்றார்” எனக்கூறி நெகிழ்ந்து நின்றார் அப்புதையில்; 63

திருந்தாதவர் வருந்தும் வண்ணம் செய்வேன்

பொருந்தச் சொன்ன புதையில்தமைப் புகழோர் நோக்கி, “நன்னெஞ்சீர்!
திருந்தா மக்கள் குறைசியர்கள் திருந்த வேண்டும் இலை என்றால்
வருந்தும் வண்ணம் தாக்கிடுவேன் வாய்மை இதுவென் றுரைசெய்தார்
பொருந்தும் பொருந்தும் எனக்கூறிப் புதையில் பகைவர் இடம் போனார்; 64

உறுவா வந்து நேரில் கண்டார்

புதையில் வந்து புகன்றது போல் புகழ்நல் மகனார் உறுவாவும்
அதையே தூதுப் பொருளாக அண்ணல் நபியார்முன் சொன்னார்
இதயம் ஒன்றித் தோழரெலாம் இசைந்து நின்ற நிலை கண்டே
முதலோன் தூதர் புகழை எலாம் முன்சொன்னார்போல் இவர்சொன்னார். 65