இறைவன் உரை வந்தது
கூடிநின்ற தோழர்கள் கூறி னார்கள் தலைக் கொன்றாய்ப்
பேடி போலத் திருடர்கள் பேசா திருந்தார் என்றாலும்
நாடிச் சொல்க எனக் கேட்ட நபியார் முன்னே இறைவனுரை
தேடி வந்து தெரிவித்தார் திருடர்க் கேற்ற தண்டனையே! 90
உள்ளத்தால் திருட நினைப்பதும் தீதே
கள்ளத் தாலே பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வோம் எனஒருவர்
உள்ளத் தாலே உள்ளுவதும் ஒவ்வாத் தீய செயலன்றோ?
கள்ளத்தாலே வருசெல்வம் கணக்கி றந்தே சேர்ந்தாலும்
எள்ளத் தனையும் இல்லாமல் இயல்பாய்க் கெட்டு
விடுமன்றோ? 91
திருடர்களுக்கு இறைவனின் அருள்
கிடைக்காது
இழிந்த களவை விரும்புபவர் இறுதி யாக இவ்வுலகில்
அழிந்து போகும் அளவிற்கே அல்லல் தானே படுவார்கள்;
ஒழிந்து போகும் பொருள்விரும்பி ஊக்கம் திருட்டில் கொள்பவர்கள்
பொழிந்த அன்பு மனமின்றிப் புகழ்வான் அருளும்
அடையார்கள்; 92
வான் பேரின்பம் விரும்புவோர்
திருட எண்ணார்
வான் பேரின்பம் விரும்புகிற மனிதன் என்னும் மதிப்படையத்
தான்வஞ் சித்துப் பிறர்பொருளைக் கவராத் தன்மை கொள்வதுவே
தேன் போல் வாழ்வின் சிறப்பறிந்து தெளியார் தங்கள் நெஞ்சத்தை
மாண்பி ல்லாத களவின்கண் மாறா திருக்க வைப்பார்கள். 93
திருட்டுக்குத் தண்டனை
கைகளை வெட்டல்
“ஆகாச் செயலாம் கள்ளத்தை ஆணோ பெண்ணோ எவர்செயினும்
பாகாய் நெஞ்சம் உருகிவிடப் பக்கம் வந்து கெஞ்சிடினும்
வாகாய் அந்தக் கள்ளர்களின் வாய்த்த கைகள் இரண்டினையும்
ஆகும் தண்டம் எனஎண்ணி அந்தப்போழ்தே வெட்டிடுக.” 94
தண்டனை நிறைவேற்றப்பட்டது
என்னும் இறைவன் திருவுரைதான்
இறங்கக் கேட்ட அப்போதே
இன்னும் காலம் கடத்தாதீர் இன்னார் மாறு கைகால்கள்
முன்னே வெட்டிக் கொண்டுபோய் முள்சூழ் அற்றா
காடுதனில்
இன்னே வீசி எறியுங்கள் என்றார் நபிகள் நாயகமே! 95
***
|