பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்429


அவரொடு வாழ்ந்திருந்தால் அவருக்கு நான் அடிமை

கிருத்துவ நெறிபாராட்டும் கெய்சரும் நபிகள் கோனின்
திருத்தவ மேன்மை யாவும் தெளிவுறக் கேட்டுப் பின்னர்ப்
பொருத்தமே! நபியே அன்னார் புகழினார் தம்மோடு ஒன்றி
இருந்திருப் பேனே யானால் இணையடி தொழுதே வாழ்வேன்; 12

அபாசுபியான் மனம் புழுங்கிச் சென்றான்

ஆண்டிடும் இந்த நாடும் அண்ணலின் ஆணை கேட்கும்
ஈண்டு இந்த உலக மெல்லாம் இனியன்அல் லாவை ஏற்று
வேண்டும்என் றாங்கே சொன்ன வேந்தனின் நிலையை நோக்கி
ஆண்டுளம் புழுங்கி நின்ற அபாசுபி யானும் சென்றான். 13

பாரசீக மன்னர்க்கு மடல்

பாரசீ கத்தை ஆண்டு பார்புகழ் ஈட்டிக் கொண்ட
சீரமை குசுரு பர்வே(சு) எனும்பெரு வேந்தனுக்குப்
பாரினைக் கவரும் ஆற்றல் படைத்தமா நபிக்கோன் நல்லார்
பேரமைத் தோலை ஒன்று பெருமையோடு அனுப்பி விட்டார். 14

அல்லாஹ்வின் பேர்க்குக் கீழா என்பேர்?

மன்னவன் பேர்க்கு மேலே மகம்மது தம்பேர் வைத்துப்
பின்னரும் அதன்மேல் தெய்வப் பேரினை வைத்து வேந்தன்
முன்னமே அனுப்பி வைத்த முறையினால் இகழ்ந்து விட்டான்
அன்னதோர் அடிமை எந்த ஆற்றலால் இதனைச் செய்தான்? 15

மடலைக் கிழித்து எறிந்தான்

என்றவன் சினந்து பொங்கி ஏந்திவந் திட்ட ஓலை
நன்று நன்றென்று கூவி நடுவில் நின் றவையின் முன்னே
அன்றந்த ஓலை தன்னை அழித்தனன் கிழித்து வீசி
நின்றுகண் டவர்கள் அந்த நிகழ்ச்சியை நபிக்குச் சொன்னார்; 16

மடல் சிதைந்தது போல் அவன் வாழ்வும் சிதையும்

அல்லாவின் ஆணை உற்ற அரியஇவ் வோலை தன்னைப்
புல்லியோன் இகழ்ந்த வாறே புகழிலான் இழிவான் என்றே
சொல்லிய நபிநல்லாரின் சொல்லது மெய்யாம் வண்ணம்
பல்லியம் முழங்கு வீரர் படையொடும் சிதறி வீழ்ந்தான். 17