முகம்மதுவைச் சிறைபிடிக்க
அனுப்பினான்
நல்லியல் பின்றி ஓலை நல்கிய நபிஎன் பாரை
தள்ளியே சிறைக்குள் வைத்துத் தாக்கிட வேண்டு மென்று
சொல்லியே ஏமன் ஆளும் துணைவருக்(கு) ஆணையிட்டான்
புல்லிய உள்ளம் கொண்டு பொருமிய குசுரு வேந்தன்; 18
அரசன் ஆணையை நிறைவேற்ற
வந்தோம்
ஆணையின் படியே ஏமன் ஆளுநர் ஆணை யிட்டே
ஏனைய வீரர் தம்மை ஏவினார்; அன்னார் தாமும்
பூனையைப் போல் ஒடுங்கிப் புகழினார் முன்போய் நின்று
ஆணையே இட்டார் அந்த அரசராம் குசுரு” என்றார்; 19
நாளைக் காலையில் வருக
என்றார்
என்னையா சிறைபிடிக்க ஏவினான் அரசன்? என்றார்
சொன்னவர் “ஆம்ஆம்” என்றார் கூடர்நபி அவரை நோக்கி
நன்னர்நீர் தங்கி நாளைக் காலையில் வருக” என்றார்.
புன்னகை செய்தன் னாரும் புலரட்டும்” என இருந்தார்; 20
காலையில் சென்று கண்டனர்
இரவது கழிந்து வெய்யோன்
இன்முகம் காட்டி வந்தான்
இரவெலாம் விழித்துக் காலம் எதிர்நோக்கி
இருந்த வீரர்
தரைஎலாம் வளர்க்க வந்த தகையோரைக்காண எண்ணி
விரைவுடன் சென்றார்; வந்த வீரரைக் கண்ட கோமான்; 21
நேற்று இரவே குசுரு மன்னன்
கொல்லப்பட்டான்
மறவரே! உம்மை ஆளும் மன்னவன் புதல்வன் என்னும்
உறவினால் கொல்லப் பட்டான் உடனிதை ஆளுநர்க்கே
முறையொடு சொல்க என்றார் முகம்மது; கேட்ட வர்கள்
விரைவினில் ஓடிச் சென்று விளம்பினார் அன்னவாறே! 22
அண்ணலின் நெறியைப்
பின்பற்றினான்
அண்ணலார் உரைத்த வாறே அப்பாவைப் புதல்வன் கொன்றான்
என்னுமோர் செய்தி உற்றோன் இமைக்காமல் கல்போல் நின்றான்
பின்னரும் பெருமை கொண்ட பெருமானின் புகழை எண்ணித்
தன்னொரு கொள்கை நீங்கித் தனிப்புகழ் நெறிநின் றானே! 23
|