பக்கம் எண் :

432துரை-மாலிறையன்

கைபர்ப் போர்

புலம் பெயர்ந்த ஏழாம் ஆண்டில்

நன்னகர் மக்கா நீங்கி நடந்தன எழுபே ராண்டு
பொன்னகர் மதினா வேந்தர் புகழ்வளர்ந் துயரக் கண்டு
முன்னகம் பொறாமைக் குள்ளே மூழ்கிய யூத மக்கள்
மன்னிய கைபர் என்னும் மலைக்குமேல் வாழ்ந்து வந்தார். 29

யூதர்கள் திட்டம் தீட்டினார்

கோட்டைகள் ஆறு கட்டிக் கொள்கையில் ஒட்டி வந்த
நாட்டினர் தம்மோ டொன்றி நபிஎனும் கதிர்வண் ணத்தை
நீட்டுபொய் உரைகள் என்னும் நெருப்பினால் மறைப்போம் என்று
தீட்டினார் திட்டம் நெஞ்சம் தெளிவிலா நிலைமை யாலே! 30

உட்பகை கொண்டிருந்தனர்

முட்படர் களைநன் செய்யில் முளைத்திருப் பதனைப் போல
உட்பகை கொண்டு வாழ்ந்தார் உயர்மதி னாவில் சில்லோர்
நட்பவ ரோடு பேசி நபியாரை மாய்ப்பதற்கே
ஒட்டிய கைபர் வாழும் யூதர்கள் செயல்மேற் கொண்டார்; 31

பகைவரை ஒற்றி ஆராய்ந்தனர்

பகைமையைத் தேடி வந்து பண்பின்றிப் பகைக்கும் தெவ்வர்
தொகைவரின் புறம்காண் கின்ற தூயரே நபிகள் கோமான்
புகைமனத் தவர்கள் செய்யும் புன்மையை ஒற்றிக் கண்டு
வகைவகை யான போர்கள் வரலாற்றில் விளங்கச் செய்தார். 32

கைபரில் யூதரோடு மோதினார்

இறைவனின் பெருமை காக்கும் எண்ணத்தால் போர்கள் செய்த
மறைவலார் மாண்பு கொண்ட மகம்மது கைபர் நாடி
முறையொடு யூத ரோடு மோதினார் ஆற்றல் கெட்டு
நிறையினை இழந்த யூதர் நிலைதடுமாறிப் போனார். 33

யூதர் அமைதி நாடி வந்தனர்

போரினை விரும்பி நந்தம் புகழெலாம் இழந்தோம் என்று
கூறின யூத மக்கள் கோதிலார் தம்பால் வந்து
“நேரியோய்!” பொறுக்க வேண்டும் நிகழும் போர்நிறுத்தி எங்கள்
கோரிக்கை ஏற்றுக் கொண்டு கொள்கையை மதிக்க வேண்டும் 34