|
உடன்படிக்கை ஏற்பட்டது
யூதர்கள் சமயக் கொள்கை ஊடுநாம் புகுவதில்லை
ஏதமில் கைபர் மண்ணின் ஈடிலா வருவாய் தன்னில்
பாதியை முசுலிம் கட்குப் பகையற நல்க வேண்டும்
சூதிலா யூதர் தங்கள் சொத்தினை அடைய வேண்டும்; 35
யூதர் கோட்டையை ஒப்படைக்க
வேண்டும்
கோட்டையில் வாழும் யூதர் கொள்கையில் தலையீடில்லை
நாட்டிய வெற்றி கொண்ட நமதுநல் முசுலிம் மக்கள்
கேட்டனர் ஆயின் யூதர் கேடின்றிக் கோட்டை தன்னை
மீட்டும் ஒப் படைத்துவிட்டு வெளியேற வேண்டும்”
என்றே; 36
யூதர் ஒத்து வாழ்ந்தனர்
நல்வகை உடன்படிக்கை நாட்டினார்
நபிகள் கோமான்
மல்வகை யாலே வெல்ல மாட்டாத யூத மக்கள்
செல்வகை அறிந்தி டாமல் செம்மலார் ஆற்றல் எண்ணிப்
பல்வகை யாலும் ஒத்துப் பணிவுடன் வாழும் நாளில்; 37
செயினபு என்பவள் வந்தாள்
வெற்றியே விளைத்த வேந்தர் விழைவுடன் கைபர் மண்ணில்
அற்றவர் துன்பம் போக்கி அன்புடன் வாழ்ந்த போது
பற்றுள யூத ரோடு பழகினர் ஆத லாலே
உற்றசீர்ச் செயினபு என்னும் ஒருத்திமுன் வந்து
நின்றே; 38
ஐய! விருந்தினை ஏற்க
வேண்டும் என்றாள்
“தவப்பெருஞ் செல்வ! தங்கள் தனிப்பெருஞ் சிறப்புக் கண்டேன்
சுவைப்பொருள் சமைத்து நல்கும் தூயள்யான் தங்க ளுக்கும்
உவப்புடன் இருக்கும் தங்கள் உற்றநல் தோழர்
கட்கும்
எவற்றுக்கும் சிறந்த தான எழில்விருந் தளிக்க
உள்ளேன்; 39
முகம்மது மனம் உருகினார்
வருகவே அன்போ” டென்று வருந்தினள் அழைத்தாள் அப்பெண்
பெருகவே ஆர்வம் கொண்டு பேசிய யூதப் பெண்ணாள்
பருகுவாள் அன்ன கேண்மைப் பண்பினால் அழைத்தாள் என்றே
உருகினார் உள்ளம் அல்லா ஒளியினான் தூதர் அன்றே; 40
|