பக்கம் எண் :

434துரை-மாலிறையன்

முகம்மது விருந்துக்குப் போனார்

நேயமாய் அழைத்தாள் என்னும் நேர்மையால் வாய்மை யாளர்
பாயும்நல் அன்பு கொண்டு பக்கத்தில் இருந்த நட்புத்
தூயர்கள் தமையும் கூட்டித் தொடுமனப் பேச்சி னாளின்
ஆயநல் விருந்து மாந்த அவள்மனை நோக்கிப் போனார்; 41

வஞ்சகத்தை மறைத்தாள்

அரியவர் வருகை கண்ட அளவிலே யூதப் பெண்ணாள்
“பெரியவா! வருக” என்று பேசியே முகமன் கூறி
உரிய வா(று) அமர வைத்தே உரையினால் நெகிழப் பண்ணிக்
கரிய வா(று) இருந்த நெஞ்சைக் காட்டாமல் நடந்து கொண்டாள். 42

“உண்ண வருக” என்றாள்

“உண்ணவே வருக” என்றே ஊட்டுவாள் போலக் கூறி
அண்ணலார் தமையும் தோழர் அன்பினார் தமையும் போற்றி
வண்ணமாய் விருந்து வைத்து வணங்குதல் போல நின்றாள்
விண்ணலான் தூதர் தாமும் விருப்பமாய் இருந்தார் ஆங்கே; 43

நஞ்சு கலந்து வைத்தாள்

கெஞ்சியே அழைத்த அப்பெண் கெடுதியே செய்யக் கொண்ட
நெஞ்சினால் சமைத்த ஊணில் நெடியவர் உயிரை மாய்க்க
நஞ்சினைக் கலந்து வைத்தாள் நபிகளார் உண்ணும் முன்னே
வஞ்சியின் வஞ்ச கத்தை வகையுடன் தெரிந்து கொண்டார்; 44

ஒருவர் மாண்டார் மற்றவர் தப்பினார்

நஞ்சென உணரா துண்ட நல்லவர் ஒருவர் மாண்டார்
எஞ்சியோர் நஞ்சு ணாவை எடுத்துணா(து) உயிர் பிழைத்தார்
விஞ்சிய அன்பின் செம்மல் வினையினாள் தன்னை நோக்கி
நஞ்சினைக் கலந்த தேனோ நங்கையே” என்று கேட்டார்; 45

அவள் செயலை மன்னித்தார்

“கொல்லவே எண்ணி இந்தக் கொடுஞ்செயல் புரிந்தேன்” என்று
மெல்லவே அந்தப் பெண்தன் மிகுதீய நெஞ்சம் சொன்னாள்;
புல்லிய மனத்தி னாளின் புகழிலாச் செயல் மன்னித்துச்
செல்லவே செம்மலார் பின் சென்றனர் தோழர் தாமே; 46