பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்435


உமது மாண்பை ஆராய்ந்தோம்

அவ்வயின் வந்த யூதர் அகம்மதே! உமது மாண்பைச்
செவ்வணம் சீர்தூக்கத்தான் சிறுசெயல் இதைநாம் செய்தோம்
செவ்வியல் நெறியில் நின்று செய்வினை உணர்ந்து கொண்டோம்
வெவ்வியல் நெறிவேறில்லை வேந்தரே!” என்று சொன்னார். 47

முகம்மது விலகிச் சென்றார்

வேந்தரும் யூதர் தம்மை வெங்கொடு நஞ்சு வைத்த
மாந்தர்என் றிகழ்ந்தி டாமல் மன்னித்து வாழ்த்தி யூதப்
பூந்தளிர் மேனியாளைப் பொறுத்துடன் அமைதியாகச்
சூழ்ந்ததம் தோழ ரோடும் துளங்கியே விலகிப் போனார்; 48

சபிய்யா கணவனை இழந்தார்

யூதர்தம் மோடு செய்த ஒப்பிலாப் போரில் கொண்ட
யூதரின் மகளாரான ஒளிமுகச் சபிய்யா தன்சீர்க்
காதல்செய் கணவர் உற்ற களப்போரைச் செய்து மாண்டார்
ஆதலால் அணங்கி னார்மேல் அண்ணலும் இரக்கம் கொண்டார் 49

சபிய்யாவை மணந்து கொண்டார்

அடிமையாய்ச் சபிய்யா தன்னை ஆக்கிட விருப்ப மின்றி
விடியலை அன்னார் வாழ்வில் விளைத்திட எண்ணம்கொண்டு
குடிசெயும் மனைவி யாக்கி்க் கொண்டனர் மின்ன லோடும்
இடிசெயும் வானத் தூதர் இறைவனின் அருளி னாலே! 50

புலம் பெயர்ந்தேழாம் ஆண்டில்

புலம்பெயர்ந் தாறாம் ஆண்டில் பொன்நபிப் பெருமான் அன்பு
நலம்திகழ் இறைஇல் லத்தில் நடைபெறத் தவறி விட்ட
குலம்புகழ் தொழுகை செய்யாக் குறைவற ஏழாம் ஆண்டில்
நிலம்புரண் டெழுதல் போல நெருங்கியோர் சூழச் சென்றார். 51

முகம்மதுவைக் கண்டு புழுங்கினர்

இரட்டிய ஆயிரம் பேர் இனியநல் லிதயத்தோடும்
திரட்டிய அறுபஃதாகத் திரண்டன ஒட்டகங்கள்;
முரட்டினத் தெவ்வர் அன்பு முகம்மதைத் காணக் காண
அரற்றினர் தங்களுக்குள் அடங்காத பகைமை யாலே! 52