பக்கம் எண் :

436துரை-மாலிறையன்

ககுபாவில் படைக்கலம் எடுத்துப் போகவில்லை

ஒட்டார்க ளோடு செய்த உடன்படிக் கையின் கொள்கை
தட்டாமல் தங்க ளோடு தடைசெய்த படைகளேதும்
கட்டாமல் உடைவாள் ஒன்றே கையினில் எடுத்துச் சென்றார்
கட்டாகக் கட்டி மற்றக் கலங்களைத் தொலைவில் வைத்தே; 53

கசுருல் அசுவத்துக் கல்லைத் தொட்டார்

இறைவனின் இல்லம் காண ஏங்கிடும் அன்பர் சூழ
நிறை பணி நபியார் மக்கா நெருங்கினார்; நெருங்கு முன்னே
“இறையவா! பணிந்தேன் என்னும் எழிலுரை எழுப்பிச் சென்றார்
மறை புகழ் கின்ற கல்லை மதித்தனர் தொட்ட வாறே; 54

பாங்கொலி எழுந்தது

ஆனது தொழுகைக் கான அரியநல் வேளை என்றே
வானது கேட்கப் பாங்காய் வழங்கினர் அழைப்பே; இன்பத்
தேனது காதில் பாயத் தீஞ்சுடர் முசுலிம் மக்கள்
போனது கண்டு கண்டு புழுங்கினர் மக்கத் தாரே! 55

உம்மு கபீபா - உபைதுல்லாவை மணந்தார்

அல்லாவை நம்பாப் புல்லன் அபாசுபி யான் புதல்வி
நல்லார்உம் முகபீ பாவை நவிலுவர் ரமுலா என்றே
வல்லார் உபைதுல்லாவை வளர்மணம் முடித்துக் கொண்டு
பல்லாரும் புகழ அல்லா பற்றினால் முசுலீம் ஆனார்; 56

அபிசீனியாவில் இரு மக்களைப் பெற்றார்

அமைதியை நோக்கி அல்லா அன்பர்கள் எல்லாம் கூடி
அமைஅபிசீனி யாவை அடைந்தஅந் நாளில் அன்பால்
இமைவிழி எனத் திகழ்ந்த இருவரும் சேர்ந்து போனார்
சுமையிலா அன்பு வாழ்வில் தொடர்ந்திரு மக்கள் ஈன்றார். 57

கணவர் உபைதுல்லா கிருத்துவராக மாறினார்

அல்லாவை வாழ்த்தி அன்னார் அமைதியாய் வாழுங் காலை
சொல்வார்கள் சொல்லைக் கேட்டுச் சுற்றிய உபைதுல்லாவும்
நல்லார்தாம் நெஞ்சம் மாறி நாடினார் கிருத்துக் கொள்கை
பல்லாரும் போற்றும் அன்புப் பாவையோ தீனில் நின்றார். 58