பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்437


குடிப்பழக்கத்தால் கணவர் மறைந்தார்

படிப்படி யாக அல்லா பற்றினை மறந்த தாலே
அடிப்படை மாறி விட்ட அகத்தினார் நிலைமை மீறிக்
குடிப்பழக் கத்தால் கெட்டுக் குலைந்தனர் வாழ்க்கை மீதில்
பிடிப்பதும் இன்றி ஆவி பிரிந்திடப் பெற்றார் அன்றே; 59

முகம்மது நபி இரக்கம் கொண்டார்

கொண்டானைப் பிரிந்து விட்ட கோதையை மனத்தால் எண்ணித்
திண்டாடு வாரோ என்று திகைத்தசீர் நபிகள் கோமான்
தொண்டாளர் சூழும் நெஞ்சத் தூய்அபி சீனியாவின்
வண்டாடும் மலர்த்தார் மன்னன் மனங்கொள இதனைச் சொன்னார்; 60

அக்கைம் பெண்ணை நான் மணந்து கொள்வேன்

பூவளம் மணக்கும் நாட்டின் புகழ்நலம் விரிந்த வேந்தே!
காவலன் இன்றி வாடும் கவின்மலர்ச் செடிபோல் வாழும்
தாய்வளப் பெருமை கொண்ட தனியள்உம் மபீபா தன்னைக்
காவலாய் மணந்து கொள்ளும் கருத்தினேன் என்று சொன்னார்”. 61

அரசன் இசைந்து மணமுடித்தான்

அண்ணல் இவ் வாறு கேட்ட அன்பினை எண்ணி மன்னன்
தண்ணளி மிக்கா னாகித் தனியளின் கருத்து ணர்ந்து
புண்ணிய மணமுடித்துப் புதுமண விருந்தளித்தான்
எண்ணிய பரிசை எல்லாம் ஏற்றவா றெடுத்துத் தந்தே; 62

மைமுனாவின் கணவரும் மறைந்தார்

அன்புளார் அப்பாசு என்பார் ஐயனின் பெரிய தந்தை
மன்புகழ் மனைவி யாரின் மதிப்புறு தங்கை யான
பண்புறு மைமூ னாதன் பழியிலா வாழ்வில் உற்ற
நண்புறு கணவ னாரும் நலம் கெட்டு மறைந்து விட்டார். 63

தந்தை அப்பாசு மனம் கலங்கினார்

பைம்பொன்னாய் ஒளிர்ந்த நங்கை படர்ஒளி எல்லாம் கெட்டுக்
கைம்பெண்ணாய் இருக்கக் கண்டு கலங்கிய அப்பாசு, “ஐயன்
மொய்ம்புள்ளார் இரக்கம் உள்ளார் மொழிவதைத் கேட்பார்” என்றே
ஐம்பொன்னால் செய்து வைத்த அழகினார் நிலையைச் சொன்னார்; 64