இசுலாமியரே! போர்க்கு எழுக
வீரமே விளைக்கும் நல் தீன் வேங்கைகாள்! அல்லா வெல்லும்
நேரமே இதுதான் நீவிர் நெடியரோ மானியர் தம்
பேரர சோடும் மோதும் பேற்றினைப் பெற்றீர் இந்நாள்
பாரர சாள நந்தம் படைநடந் திடவே வேண்டும்; 71
அண்ணலாரின் அறிவுரை
வேங்கைமூ வாயிரத்தை வெல்லநூ றாயிரத்துப்
பாங்கெழில் எலிகள் கூட்டம் படைஎடுத் தெதிர்க்க வந்தால்
ஓங்கிய படைகள் ஏந்தி உறுபகைப் போர்செய்யுங்கள்
ஆங்குநம் சயது மாண்டால் அடுத்தவர் சகுபர் ஆவார். 72
சயது மாண்டார் சகுபர் தலைவரானார்
சகுபரின் தலைமை வீழ்ந்தால் தக்கஅப் துல்லா இப்னு
தொகுபடைக் கெல்லாம் உற்ற தோன்றலாய் ஆதல் வேண்டும்
பகையினால் அவரும் வீழ்ந்தால் படைகளே! நுமக்குள் உற்ற
தகுதியால் ஒருவர் தம்மைத் தலைவராய் ஆக்கு கென்றார். 73
வீரர்கள் பெருமை கொண்டனர்
மூத்தாவில் மூண்ட போரில் மோதிய முசுலீம் வீரர்
தீத்தாவும் கண்க ளோடும் தீன்நலப் பெருமை காத்தார்
நீத்தாலும் உயிரைப் பல்லோர் நின்றார்கள் புகழால் நல்லோர்
பூத்தால்பூ மணக்கும் வென்றோர் போராலே மணந்தார் அம்மா! 74
வீரர்கள் மலைத்தனர்
சயதுபின் சகுபர் நின்றார் சரசர எனச் சுழன்றார்
அயல்வரும் பகையை வென்றார் அதிர்படைத் தொகையைக் கொன்றார்
கயலென மின்னும் கைவாள் களமெலாம் தெரியச் சென்றார்
முயலென அதிர்ந்த தெவ்வர் முன்னின்ற வேங்கை என்றார். 75
சகுபரின் முதுகைக் காணமுடியவில்லை
ஒப்பிலா வீரம் காட்டி ஒட்டாரைச் சகுபர் சாய்க்கச்
செப்பிலா இரும்பி னாலா செய்ததிவ் வுடலே என்று
முப்புறம் சூழ்ந்து கண்டார் முன்படை வீர ரேனும்
அப்புற முதுகைக் காணும் ஆற்றலோ அவர்கட் கில்லை. 76
|