களிறு போல் நின்றார்
ஈட்டியால் வாளால் நீண்ட இரும்பினால் துளைகள் போட்டும்
நீட்டிய படைகள் யாவும் நெருங்கியே மார்பில் பாயக்
காட்டியே வென்றார் வீரக் களிறென நின்றார் அன்றி
மாட்டிய மான் போல் ஆகி மண்ணிலே சாய வில்லை. 77
காலிது படைத்தலைவர் ஆனார்
சகுபர்பின் அப்துல் லாவும் தலைவராய் ஆகி மாண்டார்
முகம்மது கூறினாற்போல் முசுலீமின் படைவீரர்கள்
தகைமைகா லிதுவை உற்ற தலைவராய் ஆக்கிக் கொண்டு
பகைவரைச் சாய்ப்ப தற்குப் படையெடுத்துயர்ந்து நின்றார். 78
பகைவர் கலங்கிச் சிதறி ஓடினர்
காலிது போர்க்க ளத்தைக் கலக்கினார் பகைவர் தம்மை
நாலிரு திசையும் ஓட்டி நலிந்திடச் செய்தார்; தோற்றோர்
காலெது கைஎஃதென்று கருதவும் இயலா வண்ணம்
வேலினை வாளைப் போட்டு விழுந்தடித் தோடி னாரே! 79
காலிது வெற்றியோடு திரும்பினார்
வெற்றி மேல் வெற்றி பெற்ற வீரர்கள் மூவர் மாண்டார்
நற்றுணை யாக வந்து நவில்படைத் தலைமை தன்னை
உற்ற காலிதுமுன் னேறி உரோமரை விரட்டிச் சாய்த்துச்
சுற்றம் வாழ் மதினா சென்று தோன்றல்நல் லாரைக் கண்டார்; 80
இறைஇல்லம் கிடைக்கவில்லையே!
பொன்னார் மக்கா நகர்நீங்கிப் போன எட்டாம் ஆண்டதனில்
மன்னர் மக்கள் பல்லோர்தம் மலர்வாய் கலிமா ஓதினவே
தன்னே ரில்லா நெறி இசுலாம் தழைத்துப் பொலிந்து திகழ்ந்தாலும்
மன்னும் மக்கா இறையில்லம் வாய்க்க இலையே” என எண்ணி; 81
அல்லாவில் அருள் வேண்டித் தொழுதார்கள்
அண்ணல் நபிகள் நாயகமும் அரிய முயற்சி மேற்கொண்டே
எண்ணல் இயங்கல் மக்காவின் ஏற்றம் எண்ணி வினைசெய்தல்
உண்ணல் உறங்கல் போதினிலும் உரிமை வேண்டித் தொழுகையது
பண்ணல் என்னும் பண்பினொடும் பரமன் அருளால் வாழ்ந்தார்கள். 82
|