பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்441


இறைஇல்லத்தில் இரத்தக் கறை

குசாஅக் களெனும் குலத்தவர்கள் குறைசி யவரை எதிர்த்தார்கள்
வசை வாழ் வுடைய பனூபக்கர் வள்ளல் தம்மை வெறுத்தார்கள்
இசைவில் லாத இருகுலனும் எதிர்த்துப் பகைத்துப் பொருததனால்
இசைகொள் மக்கா இறைஇல்லம் இரத்தக் கறையால் சிவந்ததுவே. 83

அரபு நாட்டு நலம் கெட்டு விடுமே

நிலைமை யதனை நேர் கண்ட நிறைமாண் புடைய அருள்மகனார்
குலையும் அரபு நாட்டு நலம் கொள்கை கெட்டு மடியுமென
அலையும் குருதி வெறிகொண்ட அனைவருக்கும் அமைதிவர
இலைவே றினிய வழிகளென இயம்பி னார்கள் அக்காலே! 84

அண்ணலார் ஆணையிட்டார்

அரிய குசாஅக் குலத்தவர்கள் ஆவி இழந்து போனார்கள்
உரிய இழப்புத் தொகைஅவர்க்கே உடனேவழங்கு(க) இலைஎன்றால்
சரிஇல் லாத பனூபக்கர் தங்கள் நட்பை நீக்கிடுக
விரியா அன்புக் குறைசியரே! விளங்கிக் கொள்க” எனச்சொல்லி; 85

இன்றேல் ஊதைபிய்யா உடன்பாடு முறிந்து விடும்.

இவை இரண்டுக்கும் இசையீரேல் ஊதை பிய்யா உடன்பாட்டை
புவியில் இன்றே முறித்திடுவோம் புகல்க என்றார் பொன்னபியார்;
இவைகள் தமக்குள் ஏற்பதுவும் எதனை என்று தெரியாமல்
நவையில் லாத உடன்பாட்டை நாமே முறிப்போம் என்றார்கள். 86

அபாசுபியான் குறைசியர்க்கு அறிவுரை தந்தான்

குற்றம் நாடாக் கொள்கையொடு குறைசி யர்கள் இதுசெய்ய
அற்றம் பார்த்து முகம்மதுகோன் ஆற்றல் கொள்வார் என எண்ணி
முற்றும் வருந்தி அபாசுபியான் முன்னே வந்து “குறைசியரே!
அற்றோம் அற்றோம் எனக்கூறி அதிர்ந்தான் அவரும் அதிர்ந்திடவே! 87