நீங்களே அண்ணலாரிடம் செல்க
நன்றும் தீதும் தேறாமல் நாங்கள் கெட்டோம் ஐயாநீர்!
சென்றும் வென்றும் வருவீர்கள் செல்வீர் இன்றே முகம்மதுமுன்
இன்றும் அந்த உடன்படிக்கை இருக்கும் என்று கூறிமனம்
ஒன்றும் படியாய்ப் பேசிடுக உரியோர் நீரே” எனச் சொன்னார்; 88
அபாசுபியான் தூது சென்றான்
அஞ்சிக் கெஞ்சிப் பதறியவர் அன்பைக் கொண்ட அபாசுபியான்
வஞ்சிக் காத உளம்கொண்ட வள்ளல்பெருமான் தமை நாடிக்
கெஞ்சிக் கேட்டுப் பார்த்திடுவோம் கேட்பார்க் கீயும் உளம்கொண்டார்
எஞ்சா அன்பர்” எனஎண்ணி ஏகி னானே அந்நாளே! 89
அபாசுபியான் தன் மகளைக் காணச் சென்றார்
அண்ணல் கோனை அணுகிடுமுன் அன்பு மகள்உம் முஅபீபா
பெண்ணார் இந்நாள் முகம்மதுவின் பிரியாத்துணையாய் உள்ளவரைக்
கண்ணால் கண்டு பேசி மனம் கனிந்து வருவோம் என முன்னே
எண்ணிக் கொண்டே அபாசுபியான் இனியார் இல்லத் துள்போனான்; 90
மகள் தரை விரிப்பைச் சுருட்டினார்
தந்தை வருகை தனைஎண்ணித் தாவி வருவாள் மகள் என்று
சிந்தை கனிந்த அபாசுபியான் சென்றான் வீட்டின் அகம்புகுந்தான்
வந்தார் தந்தை எனஎண்ணி மகிழா தந்தப் பெண்ணாரும்
முந்தி ஓடிக் கூடத்தின் முழுவிரிப்பைச் சுருட்டினரே! 91
நீ என் மகள் அல்லவா?
விரிப்பைச் சுருட்டி விலக்கியதால் வியப்புக் கொண்ட அபாசுபியான்
சிரிப்பை முகத்தில் காட்டாமல் திரிந்த முகத்தால் நோக்குகிறாய்
விரிப்பில் அமர முடியாமல் விலக்கி வைத்தும் இகழ்கின்றாய்
சிறப்பில் லையே என்மகளே சிறுமை செய்தாய்” எனவெகுண்டான். 92
|