பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்443


இந்த விரிப்பை நீங்கள் தொடக்கூடாது

தக்கா ராக நீர்வந்தால் தந்தை உம்மை வரவேற்பேன்
இக்கால் உருவ வழிபாடே இயற்று கின்ற கொள்கையுளீர்
மக்கா வாழும் குறைசியர்க்கு மாண்பை இழந்தீர் உள்ளன்பு
மிக்கார் என்றன் தலைவர்க்கே வேண்டும் இந்த விரிப்பாகும்; 93

வேறு வழி இல்லாமல் செய்தேன்

ஐயம் இன்றி மாசில்லா அரியோர் மெய்யே பட வேண்டும்
பொய்யை நாடிப் போம்உம் கால் பொருந்தல் தீதே என எண்ணி
ஐய! விரிப்பை அகற்றிட்டேன் அன்றி வேறு வழியில்லை
செய்ய என்றாள் செய்யவளே செம்மை இல்லான் சென்றனனே! 94

அபாசுபியான் பணிவாய்ப் பேசினான்

நல்லோர் போற்றும் முகம்மதுவை நாடிச் சென்ற அபாசுபியான்
வல்லோர் தாங்கள் தடையின்றி வழங்கும் வள்ளல்! வையத்தின்
எல்லார் நெஞ்சும் உறைகின்ற ஏந்தல் நீரே! எனவாழ்த்தி
வெல்லம் போல இனிமையுற விருந்துப் பேச்சுப் பேசினனே! 95

கருத்து நிறைவேறாது எனத் தெரிந்தான்

அருகில் இருந்த நால்வரையும் அபாசுபீயான் புகழ்ந்தேத்திப்
பெருகும் ஆர்வம் கொண்டான்போல் பேசிப் பின்னே தான்ஆங்கே
வருகை தந்த காரணத்தை வைத்தான் மெல்ல மனங்கொள்ள;
கருதி வந்த நினைவிங்கோ கனியா தென்றும் தெளிந்தானே; 96

மக்காவை நோக்கிச் சென்றான்

திரிந்த பாலும் திரிந்ததுதான் தேக்கா னாலும் எரிந்தவுடன்
கரிந்த கரிதான் அதுபோலக் கருதிச் செய்த உடன்படிக்கை
முறிந்த தீங்கே முறிந்ததுதான் முயன்றால்கூட முளைக்காது
திரும்பி விடவே வேண்டுமெனத் திரும்பி மக்கா புறப்பட்டான்; 97

***