பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்445


அபாசுபியானைத் தூது அனுப்பினார்

மலையைக் கண்டு முகம்மதுவின் மாண்பைக் கண்ட குறைசியர்கள்
நிலையில் நேர்ந்த மாற்றத்தால் நேரில் நின்ற அபாசுபியான்
தலைமைப் பண்பை மிகமதித்துத் தலைவா! நீர்போய் அம்மலையின்
நிலையைக் கண்டு வருகஎன நெருங்கிக் கேட்டுத் தாழ்ந்தனர்காண்; 6

அப்பாசு ஆங்கே வந்தார்

திகைத்துச் சொன்ன குறைசியர்கள் தெளிவே அடைய எண்ணியவன்
அகத்துக் கிசைந்த இருவரையே அழைத்துக் கொண்டு புறப்பட்டான்
பகைத்தார் தங்கள் பகைநீங்கிப் படர வேண்டும் நட்பென்னும்
அகத்தார் ஆன அப்பாசும் அவர்கள் காண இடைவந்தார்; 7

முகம்மது படை எடுத்து வந்துள்ளார்

ஆங்கே வந்த அப்பாசை அபாசுபீயான் நேர்கண்டு
தீங்கே வருதல் போல் தெரியும்தீஏன் மலைமேல் எரிகிறது?
தாங்கள் எனக்குச் சொல்க எனத் தாழ்ந்து கேட்டான் தனக்கவரும்
“ஈங்கே எங்கள் முகம்மதுதாம் எடுத்து வந்தார் படை என்றார்; 8

அபாசுபியான் கலங்கினான்

குன்றே பிதுங்கும் வகை வலிய கொடும்போர்ப் படையே வந்ததெனில்
இன்றே ஒழிந்தோம் என நடுங்கி என்ன செய்வ தெனக்கேட்டு
நின்றே தளர்ந்தான் அபாசுபியான்; நேர்மை மாறா அப்பாசு
கன்றே போன்ற அன்னவனின் கலக்கம் போக்கும் தாயானார்; 9

மன்னிப்புக் கேட்டால் அருள்வார்

இன்னா செய்யும் எவ்வெவர்க்கும் இனிமை புரியும் பண்பாளர்
முன்னால் வந்த அன்புருவம் முதுபேரின்ப நெறியாளர்
தன்னால் வந்தெவ் வெளியோர்க்கும் தட்டா தின்பம் தருவாரே
மன்னா! மன்னிப்பீர் என்றால் மன்னித் தாள்வார் அருளாலே! 10

ஐயம் இன்றி அருள்வார்

செய்யா தனவே செய்தோம்யாம் செம்மை வாழ்வின் நெறிமாறிப்
பொய்யாம் நெறியில் போய்விட்டோம் புகழும் கெட்டோம் எனக்கூறி
மெய்யாய்த் தாழ்ந்து நின்றுமுனம் மேன்மை அல்லா ஒளிபேணும்
ஐயா! என்றீர் ஆமாகில் ஐயம் இன்றி அருள்வாரே! 11