| 
       
      மெய்ப்பொருளின் தூதே! என்க
       
      
      இருளே ஒளியாய்த் தவறாக எண்ணி வாழ்ந்தோம் ஆகையினால் 
      தெருளே இழந்தோம் வாழ்வெல்லாம் தீராப் பகையே மேற்கொண்டோம் 
      மருளே கொண்ட உள்ளத்தால் மாண்பில் லாமல் வாழ்ந்தோம்மெய்ப் 
      பொருளின் தூதே! என்றீரேல் பொய்மை அழிய அருள்வாரே!		12
       
      
      சிறுமை செய்தே கெட்டோம்
       
      
      செய்யும் செயல்கள் எல்லாமே சிறுமைச் செயலாய்ச் செய்தழிந்தோம் 
      பெய்யும் மழைபோல் நீர்வந்தும் பேணா தழலில் வெந்தோமே 
      எய்யும் படையே துணையாக இறுமாந் திருந்தோம் ஐயா யாம் 
      உய்யும் படிவைப் பீர் என்றே உரைப்பீர் ஆயின் அருள்வாரே!		13
       
      
      பொல்லாத்தனத்தால் நிலைகெட்டோம்
       
      
      எல்லாத் திசையும் ஒளிசெய்யும் இறைவன் பெருமை நினையாமல் 
      பொல்லாத் தனத்தால் நிலைகெட்டுப் புன்மை பட்டுப்புகழ் கெட்டோம் 
      சொல்லா இழிசொல் ஒன்றில்லை சுடரோய் அன்பின் பெருமானே! 
      எல்லாம் பொறுத்து மன்னிப்பீர் என்றால் அண்ணல் அருள்வாரே!		14
       
      
      விட்டில் பூச்சி வாழ்க்கை இது!
       
      
      வெட்டி வெட்டி வீழ்த்துவதே வீரம் என்று திரிந்தோமே 
      கட்டித் தங்கம் உம்பெருமை கருதா தீங்கே அலைந்தோமே 
      விட்டில் பூச்சி வாழ்க்கை எனும் விளக்கம் மறந்தோம் எனக் கண்ணீர் 
      விட்டுத் தாழ்ந்து மன்னிப்பே வேண்டி நின்றால் அருள்வாரே!		15
       
      
      ஆசை வழியில் அலைந்தோமே
       
      
      அன்பின் பெருமை அறியாமல் ஆசை வழியில் திரிந்து மனம் 
      வன்பில் இருக்க வேவாழ்ந்து வன்மை எல்லாம் இழந்தோமே 
      தென்பில் லாதோம் எனக்கூறித் தெளிவடைந்து நல்லவர்தம் 
      முன்பு நின்றே முறையிட்டால் முகம்மதின்றே அருள்வாரே!			16
       
      
      சிறியேம் எம்மை உய்விப்பீர்
       
      
      அறியாமையால் பழியுற்றோம் அகம்பா வத்தால் நல்வழியே 
      தெரியாமல் யாம் போய்க் கெட்டோம் தீமை நன்மை தெரியாத 
      சிறியோம் எம்மை உய்விக்கும் செம்மல் உம்முன் வந்துள்ளோம் 
      வறியோம் ஐயா! மன்னிப்பீர் வள்ளால்! என்றால் அருள்வாரே!		17
       
 |