கேடு நீக்கி அருள்வார்
நாளும் நாளும் புறம்பேசி நன்றி கெட்டுப் பொய் வாழ்வில்
கோளும் பொல்லா அழுக்காறும் கொள்கை யாகிக்கொடு நச்சுத்
தேளும் பாம்பும் ஒப்பாகத் திரிந்தோம் ஐயா எனத் தாழ்ந்து
கேளும் மன்னிப்பு அக்காலே கேடும் நீக்கி அருள்வாரே! 18
நயந்து கேட்பீர்!
அல்லா ஒருவன் தான்இறைவன் அவனே பெரிய அருளாளன்
பொல்லா உருவே கடவுளெனப் புகழ்ந்து வாழ்ந்தே ஏமாந்தோம்
செல்லாக் காசு போலாகிச் சிறப்புக் கெட்டோம் எனக்கூறி
நல்லார் முன்னே மன்னிப்பை நயந்து கேட்டால் அருள்வாரே. 19
சிந்தையை மாற்றி நலம்பெறுவோம்
அப்பா சீந்த அறிவுரையை அபாசு பீயான் உளம்கொண்டு
தப்பாம் நெறியில் தான்சென்றோம் தனியே நின்றோம் தவிக்கின்றோம்
இப்போ தேநாம் முன்சென்றே இனியார் தம்மை வேண்டிடுவோம்
செப்பும் முறையில் செப்பி அவர் சிந்தை மாற்றி நலம் துய்ப்போம். 20
தோழர்கள் வெகுண்டு நோக்கினார்.
எனவே எண்ணி அபாசுபியான் இனியார் அப்பாசு உடன்ஏகிக்
கனிவே உருவாய்க் காணுகிற கறையில் லாத முகம்மதுமுன்
நினைவில் தூய நிலை கொண்டு நேரில் சென்றார்; அண்ணலவர்
வினையில் ஒன்றும் தோழர்களோ வெகுண்டார் அபாசு பியான்தனையே; 21
இன்று போய் நாளை வருக
கொதிக்கும் நெஞ்சக் கொதிப்பதனைக் கொஞ்ச நேரம் தணியவிட்டால்
மதிக்கும் படியாய் மனம் மாறும் மறையும் பகைதான் என எண்ணி
முதியோர் அப்பாசு அபாசுபியான் முன்னே இருந்தார் அவர்தம்மை
இதற்கு மேலும் இருக்காதீர் ஈங்கே மறுநாள் வருகென்றார்; 22
அல்லாவே மாண்புக்குரியவன்
புதிய கதிரோன் புலர்ந்தவுடன் புகழ்மா வேந்தர் முகம்மதுவின்
எதிரில் அப்பா சுடன்வந்த எளியோன் அபாசு பியான் நோக்கி
மதிபோல் ஒளிரும் அருட்கண்ணால் மகிழ்வாய்ப் பேசி, “நல்லன்ப!
மதித்து வணங்கும் அல்லாவே மாண்புக் குரியோன் என்பதனை; 23
|