பக்கம் எண் :

448துரை-மாலிறையன்

நீரே அல்லாவின் தூதர் என்பதில் ஐயம்

உணர்ந்தீர் அன்றோ?” எனக்கேட்டார்; “உணர்ந்தேன் ஐய!” என்றான்முன்
“மணந்தீர்! அதுபோல் யான்அந்த வானின் தூதன் என்பதனை
உணர்ந்தீர் அன்றோ?” எனக்கேட்க “உரைக்கின் றீர்கள் என்றாலும்
உணர உள்ளம் ஏற்கவிலை ஒளியோய்” என்றான் அபாசுபியான். 24

கலிமா ஓதி முசுலிம் ஆகுக

“அல்லா தன்னை ஏற்கின்ற அறிவைப் பெற்றீர் ஆதலினால்
நல்லோய்! கலிமா ஓதிஉடன் நலமாய் முசுலீம் ஆகென்றார்”
வல்லார் அப்பாசு; அதுகேட்டு வாய்மை உணர்ந்த அபாசுபியான்
பல்லார் வியக்கக் கலிமாவைப் பணிவாய் ஓதிச் சிறந்தாரே! 25

தெள்ளத் தெளிந்த நிலைபெற்றார்

உள்ளம் மாறி முசுலீமாய் உயர்ந்த அபாசு பியான் மாண்பை
வள்ளல் மேலும் உயர்த்தஎண்ணி வாய்மை உரையால் பாராட்டக்
கள்ளக் கறைகள் எல்லாம் போய்க் கனிந்த மாந்தர் அந்நிலையில்
தெள்ளத் தெளிந்த தன்மையராய்த் திகழ்ந்து முன்னர் நின்றிருந்தார். 26

அபாசுபியானைப் புகழ்ந்தார் அண்ணலார்

இறைவன் இல்லம் ஆனஎழில் இயைந்த ககுபா இடம்தனிலும்
மறையைப் போற்றும் அபாசுபியான் மகிழ்ச்சி நிறைந்த வீட்டினிலும்
முறையிட் டொளிந்த எளியோர்க்கும் முழுதும் அஞ்சி வாழ்வார்க்கும்
நிறைபண் புடைய முசுலிம்கள் நெருங்கார் துன்பம் செய” என்றார். 27

அபாசுபியான் விடுதலை பெற்றார் போல் ஆனார்

இறைஇல்லத்தில் மாண்பினையே எனக்கும் ஈந்தார் அண்ணலெனச்
சிறைவிட் டுயர்ந்த செம்மல்போல் சிறப்புற் றொளிர்ந்த அபாசுபியான்
மறைவிட் டகலா மனம்கொண்டு மணம்விட் டகலாமலர் போன்றார்
இறைபற் றோடு குளிர்ந்தவராய் இசுலாம் நெறியின் நலம் கண்டே; 28

இசுலாம் நெறியைத் தொடர்ந்து போற்றுக

ஐய! மக்கா நகர்ஏகி அளியோர் ஆன குறைசியரை
உய்ய நல்ல நெறிசொல்வேன் உடனே தருக விடை” என்றார்;
மெய்யன் புடைய முகம்மதுவும் மிகவே மகிழ்ந்து, “பண்புடை யோய்
துய்ய இசுலாம் நெறி மாண்பைத் தொடர்ந்து சொல்வீர்” எனச் சொன்னார்;29