பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்45


தாய் ஆமினா மதினா சென்றார்

ஆண்டவனின் அருள்வேண்டி வாழு கின்ற

அன்புளத்துத் தாய்அரிய ஆமினாவும்

தூண்டொளியார் முகம்மதுவை அழைத்துக் கொண்டு

தூயவர்கள் வாழுகிற மதினா ஊரில்

ஈண்டியுள்ள உறவினர்கள் இல்லம் சேர்ந்தார்

எதிர்கொண்ட அண்ணன்மார் தங்கை மீதில்

மூண்டெழுந்த அன்புரையால் முகமன் கூறி

முத்துமழை பொழிந்தார்கள் முகம்மதுக்கே! 43

குளத்தில் குளித்து விளையாடினார்

பொருந்துபுகழ் ஆமினாவும் புதல்வர் தாமும்

போற்றுகிற உறவினரோடு ஒருங்கு கூடி

விருந்துபல உண்டார்கள்; வேட்கை தீர

விழைந்துபல நல்லுரைகள் அளவளாவி

இருந்தபின்னர்ச் சிறுவர்கள் சூழச் சென்றே

இனித்ததொரு புனல்பெருகு பொய்கை கண்டார்;

அருந்தலைமைத் தாமரைபோல் அண்ணல் தோன்ற

அல்லிமலர் போல்சிறுவர் குளித்தார் ஆங்கே! 44

தடாகமெல்லாம் கத்தூரி மணம்

தாமரையே மணந்திருக்கும் தடாகத் தண்ணீர்

தனிச்சிறப்பு மான்மதத்தின் மணமே வீச

“நாமிதுபோல் புதுமையினைக் கண்டோம் இல்லை

நாட்டமெல்லாம் குளிர்ச்சிமிக நம்மைச் சுற்றி

ஆமழகுக் காட்சியெலாம் பொலிவு காட்டி

ஆர்ப்பரிக்கும் நிலைகண்டோம் ஆ! ஆ! என்றே

தீமையறு திருமதினா எகுதி மக்கள்

திகழ்பொய்கை யதன்கரையில் திகைத்துக் கண்டார்; 45