பக்கம் எண் :

450துரை-மாலிறையன்

உருவச்சிலைகளை உடைத்தெறிந்தார்

திறந்த இறைவன் இல்லத்தின் சிறப்பைக் கெடுத்த உருவங்கள்
நிறைந்தி ருக்கக் கண்டவற்றை நெடுங்கைத் தடியால் அடித்துடைத்து
மறைந்த உண்மை மலர்ந்ததென்றும் மயக்கும் பொய்மை தொலைந்ததென்றும்
மறைத்திண் மொழியை ஓதுநராய் மகிழ்ந்தார் அண்ணல் நாயகமே! 36

குபல் சிலையையும் தகர்த்தார்

தலைமைத் தெய்வம் எனும் குபலைத் தடியால் அடித்துப் புறந்தள்ளிச்
சிலையைத் தொழும்அப் பொய்ம்முறையைச் செம்மல் தகர்த்தார் தீமைநிலை
குலையச் செய்த பொன்ளொளியார் குறைசி யர்கள் நல்வாழ்க்கை
நிலையே உயரும் எனக்கூறி நேர்நின் றவர்க்கே அருள்செய்தார். 37

அப்பாசு மரபினரிடம் சம்சம் நீர் ஒப்படைத்தார்

இறைவன் புனித இல்லத்தின் இனிய திறவு கோல் தன்னை
முறையாய் நின்ற உதுமான்பால் முன்னே தந்து பின்னின்ற
நிறைமாண் புடைய அப்பாசை நெருங்கி ஐய! சம்சம் நீர்
மறைவில் லாமல் அருள்கெனவே மலர்ந்தார் நாளும் தொடர்ந்திடவே 38

பிலால் பாங்கு ஒலி எழுப்பினர்

கறுப்பர் இனத்தின் காளைஎனும் கடமை தவறாப் பிலால் தம்மைப்
பொறுப்பாய்ப் பாங்கு சொலச் சொன்னார் பொலிந்தோர் சொல்ல அதுகேட்டு
வெறுப்பாய்ச் சில்லோர் குறைசியர்கள் விலகி ஆங்கே நின்றாலும்
மறுப்பே இன்றி முசுலிம்கள் மலர்ச்சி யோடு வந்தார்கள். 39

அண்ணலார் சொற்பொழிவு நிகழ்த்தினார்

தொழுகை முடிந்த அவ்வேளை சூழ்ந்த குறைசியர்தம்பால்
விழுமி யதாகச் சொற்பொழிவை விளைத்தார் ஆங்கே அன்புக்கோன்
தொழுதற் குரியோன் அல்லாவே! தூயோன் அவனே! பிறரில்லை
பழுதில் லாத உறுதிமொழி பகர்ந்து சிறப்பாய்ச் செயல்பட்டோம்; 40

அல்லா விருப்பம் நிறைவேறியது

பகையைச் சாடித் தகர்த்து விட்டான் பணியாச் செருக்கும் பழிச்செயலும்
தொகையாய்க் கொண்ட உங்களையும் தூயோன் என்முன் விழச்செய்தான்
புகையும் உங்கள் பொறாமைக்கும் பொய்க்கும் இனிமேல் இடமில்லை
வகையாய் ஆதம் மண்ணால்தான் வந்தோம் அவர்தம் மக்கள் நாம்; 41