பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்451


குறைசியர் நாணம் அடைந்தனர்

மாறி வந்தீர் குறைசியரே! மயங்க வேண்டா; உம்கருத்தைக்
கூறி விடுங்கள் உங்களையான் கொண்டு செலுத்தும் நடைமுறையை;
பேறு பெற்ற இறை தூதர் பெருமான் இதனைக் கேட்டவுடன்
ஊறு பலவாய்ச் செய்தவர்கள் உற்ற நாணம் பெருகியதே; 42

வெட்டிச் சாய்க்க முயன்றோமே

பொய்யன் புலையன் எனத்தூற்றிப் பொல்லாங் கெல்லாம் செய்தோமே!
மெய்யன்புடைய பெருமானின் மேனி நடுங்க வைதோமே!
ஐயன் அரியன் எனஎண்ணா(து) அழியப்பேசித் தாழ்ந்தோமே
வெய்ய வினையான் எனக் கூறி வெட்டி மாய்க்க முயன்றோமே. 43

இனிய வாழ்வில் உய்வோமோ?

அருளின் பெருக்கை உணராமல் அகந்தை கொண்டு திரிந்தோமே
மருளி னுள்ளே வீழ்ந்தவராய் மணியின் ஒளியைத் துறந்தோமே
பொருளே விரும்பி வாழ்வில் மெய்ப் பொருளின் புகழை மறந்தோமே
இருளில் அலைந்தோம் அலைந்தோமே இனியும் வாழ்வில் உய்வோமோ?44

பிழையாய் வாழ்ந்து கெட்டோமே

அறத்தின் பெருமை உணராமல் அழிவின் பக்கம் நிலைநின்றோம்
புறத்தில் திரிந்து நல்வாழ்வைப் போற்றத் தெரியா தழிந்தோமே
மறத்தில் நம்பிக் கைவைத்து மனத்தைக் கெடுத்துக் கொண்டோமே
பிறத்தல் அரிதாம் இப்புவியில் பிழையாய் வாழ்ந்து கெட்டோமே! 45

செல்லாக் காசாய் ஆனோமே

கல்லால் அடித்து நல்லோரின் கருத்தைப் பகைத்துக் கொண்டோமே
சொல்லால் வடுவாய்ச் சுட்டு விடச் சொல்லித் தாழ்ந்து விட்டோமே
வல்லார் என்னும் வாய்மையினை மறைத்துத் தீமை நட்டோமே
செல்லாக் காசாய்க் சீரழிந்து சிறுமைக் கேஆட் பட்டோமே! 46

பண்பில்லாமல் அழிந்தோமே

தொழுகை செய்த கோமான்மேல் தொல்லை தரவே ஒட்டகத்தின்
அழுகும் தோலைக் குருதியினை அருவருப்பாய் வாரிப்போய்க்
கொழுப்பே ஒழுகக் கொட்டியதும் குறிக்கோள் கெட்ட நாமன்றோ
பழுதே பற்றிப் பாதை எலாம் பண்பே இன்றிச் செய்தோமே! 47