பக்கம் எண் :

452துரை-மாலிறையன்

சுடர்வான் பெருமை இகழ்ந்தோமே?

கள்ளன் தன்னைக் காண்பதுபோல் கண்முன் கண்ட போதெல்லாம்
வள்ளல் மாண்பை உணராமல் வாயால் புன்மை மொழிந்தோமே.
புள்ளும் விலங்கும் பூச்சிகளும் புழுக்கள் தாமும் அவர்பெருமை
சொல்லும் அன்றோ என்றாலும் சுடர்வான் பெருமை இகழ்ந்தோமே! 48

நேர்மை யற்றுச் செய்தோமே

ஊரை விட்டுத் துரத்தியதும் உரிமை பறித்து விரட்டியதும்
பேரைக் கேட்டே அதட்டியதும் பெருமை கேட்டுத் துடித்ததுவும்
பாரைத் திருத்த வந்தவரின் பாதை தவறென் றிடித்ததுவும்
நீரைத் தீஎன்றுரைப்பது போல் நேர்மை இல்லாச் செயலன்றோ? 49

உள்ளன்பையும் விட்டு நின்றோமே

வாட விட்டோம் உணவின்றி வருந்த விட்டோம் இடம் விட்டே
ஓட விட்டோம் உணர்வற்றே ஒதுக்கி விட்டோம்; உள்ளன்பைக்
கூட விட்டோம் நலமற்றுக் குறுகி விட்டோம் என்றாலும்
நாட விட்டோமா? இல்லை நசுக்கித்தானே விட்டோமே! 50

பித்து உற்று நடந்து கொண்டோமே

தப்பிப் பிழைத்துப் போனாலும் தடயம் தேடிப் பின்சென்றோம்
சிப்பிக் குள்ளே முத்துக்கும் சிறப்புத் தந்தோன் தூதனெனச்
செப்பித் திகழ்ந்த போதினிலும் சிறப்பை யாங்கள் அறியாமல்
எப்பித் துற்றே இகழ்ந்தோமோ எமக்கும் ஈங்கே உய்வுண்டோ? 51

பகலினும் சூரியனைக் காண மறந்தோமே

அடியார் தங்கள் பொன்னுடலை அடித்துச் சிதைத்துக் கெடுத்தோமே
கொடியார் எனஎம் செயல்காட்டிக் கொடுந்தேள் நடுங்கச் செயல் செய்தோம்
படியாப் பேர்போல் பகற்போதும் படர்செங் கதிரோன் ஒளிகாண
முடியாப் பேராய் வாழ்ந்தோமே முகம்மதுவே யாம் உய்வேமோ? 52

ஐயனே! மன்னிப்பீரா!

குற்றம் செய்த குறைசியர்கள் கூனி நாணி இது கூறிப்
பற்றும் மிகுந்து பணிவாகப் பழியே உற்றோம் ஐயாநீர்
முற்றும் எமைமன் னிப்பீரோ? மொழிக என்றார்; நாயகமோ
சற்றும் தயக்கம் இல்லாமல் சாற்றி னார்கள் அருளுரையே! 53