|
அண்ணலாரின் படை சிதறியது
மலைகுலைந்து விழுவதென மறித்து வீழும் அம்புகளால்
நிலைகுலைந்தே அண்ணலாரின் நெடும்படைகள் சிதறினவே
சிலை குலைந்து நலம்கண்ட செம்மல் கோமான் நபியவர்கள்
குலை குலைந்(து) ஓடாதிர்எனக் கூறிப் படையை
அழைத்தாரே! 60
ஓடாதீர்! வீரர்களே! வாருங்கள்
ஓடும் வீரர் தமை எல்லாம் உரக்கக் கூவி அழைத்தார்கள்
நாடும் அல்லா துணை எல்லாம் நமக்கே இருக்க ஏன்அச்சம்?
கூடும் இங்கே எனக்கூவிக் கொள்கைக் கோமான் அழைத்தவுடன்
பீடும் பெருமை யதுதானும் பெற்ற படைஞர் உடன்வந்தார். 61
அல்லாவின் அருள் காத்தது
அழைத்த ஐயன் குரல்கேட்டும் அருகர் அழைத்த ஒலி கேட்டும்
தழைத்த வீரம் மிக்கவராய்த் தாவி மீண்டும் வந்தவர்கள்
இழைத்த போரில் பகைவீரர் இடிந்தார் குலைந்தார் அடிபட்டார்
பிழைத்தோம் பிழைத்தோம் எனக்கூறிப் பின்கால்
பிடரி படமறைந்தார். 62
பகைவர் தலைதெறிக்க
ஓடினார்
மலைவிட் டோடும் மறவர்கள்
மனைவி மாரை விட்டார்கள்
சிலைவிட் டோடும் செருநர்கள் செல்வம் தனையும்
விட்டார்கள்
நிலைகெட் டோடும் வயவர்கள் நெடுஒட் டகைகள்
விட்டார்கள்
தலைதப்பித்தே ஓடியவர் தகுமெய்ப் படையும் விட்டாரே. 63
உயிர் பிழைத்தால் போதும்
ஆடுகளையும் அரிய வெள்ளிக் காசுகளையும் இழந்தார்கள்
ஓடும் முறையில் தம்செல்வம் உதறி விட்டே சென்றார்கள்
கூடு மட்டும் தம்மாவி கொண்டால்போதும் என்றார்கள்
காடும் மலையும் கடந்தோடிக் கண்காணாமல் மறைந்தார்கள். 64
தாயிபை வளைத்துப் போர்
செய்தார்
போரில் பெற்ற செல்வத்தைப் பொதுவாய்க் காவல் இடம் வைத்தே
ஊராம் தாயிபு உள்சென்றே ஓடி ஒளிந்த வீரர்களை
வாரி எடுக்கக் கோட்டையினை வளைத்துப் பன்னாள் போர்செய்தார்
ஆரும் வெளியில் வரவில்லை அதனால் முயற்சி கைவிட்டே; 65
|