பக்கம் எண் :

456துரை-மாலிறையன்

குறைசியர் பேரால் இழப்பு அதிகம்

புதிதாய் இசுலாம் நெறிபேணிப் புகுந்தார் மக்காக் குறைசியர்கள்
அதிகம் நமது தாக்குதலால் அவர்கள் செல்வம் இழந்தவர்கள்
புதிரே இல்லை மிகுதியாகப் பொருள்கள் அவர்க்குத் தந்துள்ளேன்
மதிப்பாய் ஆடும் மாடும்தாம் மக்கா வினர்க்கு யான் தந்தேன். 72

என் முழு அன்பும் உங்களுக்கே

ஆத ரவாளர் மதீனார்க்கோ அல்லா அனுப்பி வைத்ததனித்
தூதர் தமையே துணை வைத்தேன்; தூய அன்பே உம்மேல்தான்;
ஆத லாலே தோழர்களே! அல்லா தன்சீர் அருட்கொடையை
மாத வத்தீர் உம்மேல்தான் மலர்வான்” என்றார் நாயகமே! 73

தோழர்கள் வாழ்த்திசைத்தனர்

கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாம் கெழுமா நபியார் உரைதன்னைக்
கேட்ட மதீனத் தோழர்கள் கிளர்ச்சி கொண்டு நெஞ்சத்தின்
வாட்டம் போக்கி வளர்கண்ணீர் வளத்தைப் பெருக்கிக் கசிந்துருகி
நாட்டம் ஒன்றி, “நாயகமே! நன்றி” என்று முழங்கினரே! 74

அவாசு குலத்தார் பணிந்தனர்

வெற்றி பெற்ற போர்முடிவில் பெற்ற வீர அடிமைகளின்
உற்ற அவாசின் குலத்தார்கள் ஒளியோர் முன்னர்ச்சிலர்தோன்றிக்
குற்றம் இல்லாக் குணத்தவரே! குற்றம் எங்கள் குற்றம் தான்
பெற்ற தாயின் மேலாகப் பேணிக் காத்தார் அலீமாவே; 75

எங்களை மன்னித்திடுவீர் ஐயனே!

அன்னார் குலத்தோர் அடிமைகளாய் ஆதல் சரியோ? ஆதலினால்
மன்னா! அவரை விடுவித்து மன்னித் திடவே வேண்டுகிறோம்
பின்னால் அவர்கள் எப்பிழையும் பேசார் செய்யார் எனச்சொன்னார்
முன்னால் கெஞ்சி நின்றவர்பால் மொழிந்தார் அன்பு முகம்மதுவே! 76

தோழர்களைக் கேளுங்கள்

கொண்டு வந்த வீரர்களைக் கொடுத்து விட்டேன் தோழர்க்கே
கண்டு கேட்டீர் வேண்டுமெனில் கனிவாய் என்றன் பங்குதனை
உண்டென் றளித்தல் என் உரிமை உடைமை பெற்ற தோழர்களைக்
கண்டு கண்டு கேட்டிடவே கடவுள் தொழுகை இடம் வருவீர்; 77