பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்457


அனைவரும் மன்னித்து விடுவித்தனர்

என்றார் நல்லோர்; அன்னவரும் இனிதாய்ப் பள்ளி வாசல்முன்
சென்றார் தொழுகை முடிந்தவுடன் செம்மல் வந்தார் செம்மலிடம்
நின்றார் இரந்தார் இரந்தவுடன் நெகிழ்ந்தார் தந்தார் அவர்செயலை
நன்றாய்க் கண்ட தோழரெலாம் நல்கிச் சிறந்தார் அவ்வாறே. 78

ஐயனின் மனித நேயச் சிறப்பு

அன்னை அலீமா பரிவதனால் ஆறா யிரம்பேர் போர்வீரர்
தன்னி கரில்லா அன்புக்கோன் தம்மால் விடுக்கப் பெற்றார்கள்
என்னில் அந்த வான்தூதர் இதய மனித நேயத்தின்
தன்மை புகழச் சொல்லுளதோ தமிழில் என்றால் கூறுங்கள். 79

செருக்குத் தோல்வியைத் தந்தது

ஊனைன் போரின் விளைவாக ஒளியோன் தந்த திருமறையில்
தேனை ஒத்த தோர் கருத்தைத் தெளிவாய்த் தந்தான்; அல்லாவே
ஏனை எல்லா வற்றுக்கும் ஏற்றம் உடையோன் இதை மறந்து
போன படையின் பெருக்கத்தால் பொல்லாச் செருக்குக் கொண்டார்கள். 80

பள்ளத்தாக்கில் மாட்டிப் பதறினார்

அரிய பெரிய போர்கட்கோ அல்லா உரிய துணையானான்
விரிய வெற்றி உற்றதெல்லாம் விண்ணோன் உதவி அதனாலே;
கரிய நெஞ்சம் கொண்டதனால் கலக்கம் கொண்டார் வீரர்கள்
சிறிய வழியே கிடைத்ததனால் சிக்கிக் கொண்டு சிதறினரே. 81

மீண்டும் அல்லாவின் துணை வந்தது

மீண்டும் அல்லா துணை தானே மேவி வெற்றி தந்ததென
நீண்ட உரையாம் திருக்குர்ஆன் நெடுவான் மொழியை அவன் தந்தான்
ஈண்டுக் கடவுள் மறுப்பாளர் இதையே எண்ண வேண்டுமெனத்
தூண்டும் படியாம் கொள்கையினைத் தோன்றச் செய்தார் தூதுவரே! 82

அண்ணலார்க்கு இப்ராகிம் பிறந்தார்

அன்னை மாரியாகிப்(தி)யா ஆண்சேய் ஒன்றை ஈன்றார்கள்
நன்னர் இபுறாகிம் என்னும் நற்பேர் சூட்டி மகிழ்ந்தார்கள்
அண்ணல் தாமும் அச்சேய்பால் அன்பு மழையே சொரிந்தாலும்
மன்னும் அல்லா கருத்தினால்சேய் மறையச் செய்தான் ஓராண்டில்; 83