பக்கம் எண் :

460துரை-மாலிறையன்

படை தபூக்கு என்னும் இடம் சென்றது

ஆளும் பொறுப்பில் அலீஇருந்தார் அண்ணல் நபியார்படையோடும்
வாளும் தோளும் உயர்த்துகிற வயவ ரோடும் தபூக் என்று
நாளும் புகழ்கொள் இடம் சென்றார் நாள்கள் பலவாய்க் கடந்தனஓர்
ஆளும் பகைவர் வரவில்லை அதனால் ஆங்கே இருந்தபடி; 96

பலரும் நெறி மாறினர்

வேறு வேறு கூட்டத்தார் விலகி இருந்த மரபினரை
மாறு மாறு வேண்டியவர் மனத்தை மாற்ற முயன்றார்கள்
தாறு மாறாய் நடந்தவரும் தக்கார் உரைக்குக் கீழ்ப்படிந்தார்
வீறு கூறும் சிலர்தம்மை வெற்றிகொண்டும் புகழ்பெற்றார். 97

பலர் பாதுகாப்பு வரி அளிக்க இசைந்தனர்

எல்லா ருக்கும் இரங்குபவர் எளியோர்க் கிரங்க மாட்டாரோ?
பல்லார் அன்பு செயும்வேந்தர் பகையும் நீங்கி நலம்கொண்டார்
நல்லார் பல்லார் வரி “ஜிசியா” நல்கப் பணிந்தார் புகழ்கொண்டு
சொல்வார் புகழுக் கடங்காத தூயோர் மதினா நகர்சேர்ந்தார்; 98

பூக் போரே இறுதிப் போர்

பல்போர் புரிந்தும் பழியில்லாப் பரிவே கொண்ட மனமுடையார்
வெல்போர் யாவும் அல்லாவின் விருப்பத் தாலே இயல்வதெனச்
சொல்வார் இந்தப் பூக்போரே தொடர்ந்த போர்க்குள் இறுதியதாய்ப்
பல்வான் புகழ்கொள் பண்புடையார் பற்றிச் செய்த போராகும். 99

இறை இல்லம் தூய்மை பெறவில்லை

வெற்றி பெற்ற மக்காவில் வேளை தோறும் முசுலிம்கள்
முற்றி நல்ல முறைப்படியே முனைந்து தொழுகை செய்தாலும்
மற்றும் ஆங்கே இருந்தவராம் மக்கா குறைசி இனத்தார்கள்
சுற்றி வந்து ககுபாவைத் தூய்மை யறவே செய்தனரே. 100

***