பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்463


ஆதீம் தாய் மகளும் சிறை பிடிக்கப் பட்டாள்

பொல்லாத் தாயி இனத்தாரின் பொருளை, போர்செய் மறவர்களை
நல்லார் பெண்கள் குலத்தவரை நபியார் முன்வந் தளித்தார்கள்
உள்ளார் தமக்குள் ஆதீம்தாய் உயர்ந்த வள்ளல் தானீன்ற
வில்லார் புருவ மகள் தானும் வேந்தர் முன்வந் துரை செய்தாள்; 12

ஐயனே! நான் ஆதீம் தாயின் புதல்வி

எளியோர்க் கிரங்கும் எழில்நபியே! ஈகைக் கடலே! அருட்பெருக்கே!
ஒளியா நெஞ்சர் என்தந்தை உயர்பேர் ஆதீம் தாய் என்பார்
வளியார் உலகில் வள்ளலென வாழ்ந்து மறைந்தும் வாழ்கின்றார்
வெளியார் உள்ளார் என நெஞ்சில் வேறு பாடும் இல்லாதார்; 13

என் தந்தை மிகச் சிறந்த பண்பாளர்

பெண்ணைப் போற்றும் தகையாளர் பெருமைக் குரியோர் தம்வாழ்வில்
கண்ணி யத்தை உயிராகக் கட்டிக் காத்துப் பேணியவர்
புண்ணில் உள்ள ஏழைகளில் புன்மை காத்த பண்பாளர்
எண்ணில் லாத பீடுடையார் இறைவன் அடி போய்ச் சேர்ந்தார்கள். 14

தந்தையும் இறந்தார் அண்ணனும் ஓடி விட்டான்

தோற்ற எனக்கு மூத்தவனோ தொலைவில் எங்கோ போய்விட்டான்
ஊற்றம் இல்லாப் பெண்ணாள்யான் ஒளியோர் நீரே காத்தருள்க
போற்று கின்றேன் ஐயா உம் புகழைச் செவியால் கேட்டுள்ளேன்
மாற்ற வேண்டும் என்துயரம் மணியே! என்றாள் அம்மணியே; 15

அம்மா! உன் தந்தை சிறந்தவர் ஆயிற்றே

திங்கள் அன்ன முகத்தவளின் தீமை இல்லா மொழி கேட்டுத்
தங்கள் உள்ளம் இரங்கியநல் சான்றோர் “பெண்ணே! உன்தந்தை
செங்கை வருந்த ஈந்தபெருஞ் சிறப்புக் கொண்ட வள்ளலென
எங்கும் எவரும் போற்றிடவே இசுலாம் நெறியைப் பேணியவர்; 16

என்னை மட்டும் தனியே விடுவதா?

“அன்னார் உயர்வு தனைஎண்ணி அணங்கே! உன்னை விடுக்கின்றேன்
பின்னால் நல்ல பேர்கொண்டு பெருக வாழ்வாய் எனச்சொன்னார்
தன்னை மட்டும் விடுவதெனத் தக்கோர் சொன்ன உரைகேட்டு
முன்னர் நின்றாள் அண்ணலிடம் முறையிட் டுரைத்தாள் பணிவுடனே! 17