பக்கம் எண் :

464துரை-மாலிறையன்

என் உறவினையும் விட்டு விடுக

என்னை மட்டும் விடுவித்தால் ஏதும் ஈங்கே பயனில்லை
என்னைச் சேர்ந்த உறவினர்கள் எல்லாம் ஈங்கே கவலையுறப்
பின்னை யானும் எம்மூரில் பெருமை யாக வாழ்வேனோ?
என்னை விடுக்க விரும்புவீரேல் எம்மோர் தமையும் விடுக்கென்றாள். 18

அருளும் காட்டிப் பொருளும் தந்தார்

ஆங்கே உரைத்த அப்பெண்ணின் அன்பு நெஞ்சம் தான் கண்ட
ஓங்கு புகழ்மா நபியாரும் உள்ளம் இரங்கி அன்னவள்தான்
ஏங்கிச் சொன்ன சொற்படியே எல்லார் தமையும் விடுவித்துப்
பாங்கின் நல்ல பொருள்தந்தும் பகையும் நீங்கி அருள்செய்தார் 19

அண்ணன் மனம் மாறினான்

கோமான் அன்பு மனம்கண்ட கோதை நல்லாள் சிரியாபோய்
“ஈமான்” கொள்ளா அண்ணனிடம் எடுத்துச் சொன்னாள் நபிமாண்பை
பூமாண் பறியாப் புழுவைப்போல் பொல்லா நெறியில் சென்றவனும்
ஆம்மாண் புற்ற தேனீப்போல் அருந்தேன் பருகப் பறந்தானே! 20

உயர்ந்த கவிஞர் ஒருவன்

மலரைப் பார்த்தும் மலைபார்த்தும் மணத்தைக் கவரும் கடல்பார்த்தும்
நிலவைப் பார்த்தும் கதிர்பார்த்தும் நெருங்கு விண்மீன் வான்பார்த்தும்
உலவும் விலங்குக் காடுகளின் உயர்வைப் பார்த்தும் கவிபாடும்
நலமேம் பட்ட கவி ஒருவர் அரபு நாட்டில் வாழ்ந்திருந்தார்; 21

அண்ணலாரை இகழ்வதே தொழில்

முசுலிம் தம்மை இகழ்கின்ற முசைனாக் குலத்துக் குரியவராய்
இசைபெற் றிருந்த அக்கவிஞர் இசுலாம் மீது வெறுப்புடையார்
கசியும் அன்புக் குறைவுடையார் கஅப் இப்னு சூஐயர்
பசியே அவர்க்கு முகம்மது நற் பண்பை இகழும் செயல் ஒன்றே! 22

அக்கவிஞரைக் கொன்று விடுக

பாவல் லாரின் பண்பற்ற பகையை எண்ணி நபிபெருமான்
ஓய்வில்லாமல் இசுலாத்தை ஒழிக்கப்பாடும் அன்னவரை
பாவம் ஏதும் பாராமல் பற்றிக் கொன்று விடுகென்றார்
ஏவல் இட்ட பெரியோரின் எண்ணம் இயற்றப் பலர்முயன்றார்.; 23