பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்465


கவிஞரின் அண்ணன் திருந்தினார்

கொல்லும் ஆணை இருந்ததனால் கொள்கை மாறா நெறியார்கள்
ஒல்லும் காலம் எதிர்நோக்கி ஒட்டிச் சென்றார் வெட்டிடவே
கல்லும் கரையக் கவிபாடும் கற்ற கவிஞர் ஆதலினால்
மெல்ல அவர்தம் உடன்பிறந்தார் மேவி அறிவுரைகள் தந்தார்; 24

அழியாக்கவிதையைப் படைத்தும் அறிவில்லையே

அழியாக் கவிதை படைக்கின்றீர் ஆரும் போற்ற மகிழ்கின்றீர்
விழியால் அளக்க இயலாத வெய்யோன் தனையே எதிர்ப்பதெனும்
பழியே மிஞ்சும் செயல்செய்யும் படிமா நபியைப் பழிக்கின்றீர்;
வழிவே றில்லை தப்பிக்க வான்தூ துவரோ வெகுண்டுள்ளார். 25

நெஞ்சுருகி மன்னிப்பு வேண்டுக

நீரே அவர்முன் சென்றிரந்தால் நிழல்போல் காத்துநலம் செய்வார்
ஆரே துன்பம் செய்தாலும் அவரைக் கூடப் பொறுத்திடுவார்
ஊரே இந்நாள் அவர் ஆணை ஒன்றே கொண்டு பணிகிறது
நேரே சென்று நெஞ்சுருக நின்று கேட்பாய்” எனச் சொன்னார்; 26

கவிஞர் இறை இல்லத்தின் முன் நின்றார்

தவற்றை உணர்ந்தார் தகுகவிஞர் தக்கார் தொழுகை முடிந்தவுடன்
எவற்றைக் கேட்டே இரந்தாலும் இல்லை எண்ணார் எனஅறிந்து
கவலை தோய்ந்த முகத்தோடும் கழுவாய் தேடும் உளத்தோடும்
கவர்ச்சி யோடு வந்திருந்த கனிவாய் நபியார் முன்னின்றார்; 27

ஐய! கஅப் கவிஞரை மன்னிப்பீரா?

“அருளே கனியும் பெரியோரே! அல்லா வுக்கே புகழாகும்
இருளே எண்ணி வாழ்ந்தகஅப் என்னும் கவிஞர் திருந்திமனத்
தெருளே அடைந்து இங்கு இசுலாத்தைத் தேர்ந்து கொள்ள நேர்வந்தால்
மருளே இன்றி அக்கவியை மன்னிப் பீரா?” எனக் கேட்டார். 28

திருந்தினால் மன்னிப்பேன்

மன்னித் திடவே வந்த நபி மறுத்தா ஆங்கே மொழிந்திடுவார்?
எண்ணிக் கையில் லாத்தவற்றை எவரே செய்து விட்டாலும்
பின்னும் தவறே செயாமல் முன் பிழையை எண்ணி வருந்துபவர்
மன்னித்தற்கே உரியரெனும் வாய்மை தனையே சொன்னார்கள்; 29