பக்கம் எண் :

466துரை-மாலிறையன்

யானே அந்தக் கவிஞன் என்றார்

அண்ணால்! யானே கஅப் என்னும் அந்தக் கவிஞன் எனச்சொல்லக்
கண்ணால் கனிந்த படிஅந்தக் கவிஞர் தமக்கும் நபி அருள
முன்னால் இருந்த தோழர்களும் முழுதும் மகிழ்ந்தார்; என்றாலும்
பின்னால் இருந்த ஆசீமோ பிழையான் என்றே முனிந்தெழுந்தார். 30

தோழர்களைத் தோன்றல் அமைதி படுத்தினார்

முனிந்த ஆசீம் தமைநோக்கி முத்து முகத்து விண்ணொளியார்
பணிந்த இவரைப் பண்புடன்நாம் பரிந்து காத்தல் கடன்என்றார்;
கனிந்த அன்புக் கவிஞர்கஅப் காதலாலே கசிந்துருகி
இனிக்கும் சங்கத் தமிழேபோல் இசுலாம் கோனின் நலம் புனைந்தார்; 31

பச்சைப் போர்வைக் கவிதை எழுந்தது

உலகை ஒளியே செயவந்த உயர்பே ரொளியே! எனத்தொடங்கும்
நலமேம் பட்ட கவிஒன்றை நவின்றார்; அண்ணல் அதுகேட்டு
நலமாய் அதனை, “அல்லாவின் நற்பே ரொளியே” என மாற்றிச்
சொலவே உரைத்தார் அவ்வாறே தூயோர் தாமும் பாடிடவே; 32

அண்ணல் பொன்னாடை போர்த்தினார்

இனிய பாடல் பொருள்கேட்டே இதயம் மகிழ்ந்த நாயகமும்
தணியா ஆர்வம் அதுகொண்டு தம்மேல் பச்சைப் போர்வைதனைத்
தனிச்சிறப்பே தரஎண்ணித் தகவே எடுத்துக் கவிஞர்க்கு
மணிக்கை யதனால் போர்த்தினரே மன்னும் புகழ்தான் தோன்றிடவே! 33

இசுலாமிய ஒளி பரவியது

தூது வந்தான்

வானகத் தூதர் வாய்மை வள்ளலின் அன்பே எங்கும்
ஆன இவ்வுலக மண்ணில் அருள் ஒளி பரவக் கண்டும்
தீனவர் பெருமை எங்கும் செவ்வணம் முழுங்கக் கேட்டும்
தேன் எனும் தீனை நாடத் தேயத்தார் தேடி வந்தார். 34

அண்ணலின் நட்பு உயர்த்தும்

அண்ணலின் நட்பு வானத்து ஆண்டவன் நட்பை ஒக்கும்
தண்ணிய திருக்குர்ஆனின் தனிஉரை தூய்மை ஆக்கும்
எண்ணிய வான வாழ்வை எளிதிலே அடையப் பண்ணும்
மண்ணிலே உயர்த்தும் என்னும் மனத்தினால் பலரும் வந்தார். 35