பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்467


இசுலாம் நெறி வளர்ந்தது

வல்லவன் ஒருவன் தந்த வரத்தினால் மண்மேல் வந்த
நல்லவர் நபிகளார் தம் நாயகம் தங்கள் மீது
புல்லவர் குறைசி யர்கள் பொறாமையை விரித்துக் காட்டும்
வல்லவர் ஆக ஆக விரிந்ததே இசுலாம் தானே! 36

வஞ்சகரால் வளர்ந்தது

எதிர்ப்பவர் எதிர்த்தெதிர்த்தே இன்னலாம் எண்ணெய் ஊற்றிக்
கொதிப்பவர் நெஞ்சில் ஆன கொடுஞ்சினத் தீயும் பற்றி
மதிப்பிலார் செய்து வந்த வஞ்சகக் காற்றும் வீசக்
கதிர்த்தெழும் சூரியன் போல் கனன்றுதீன் செழித் தோங்கிற்றே! 37

இறைவனின் ஆற்றல் உதவியது

பொறுத்தலை அன்பை வானப் புகழினைத் துணையாய்க் கொண்டு
வெறுத்தலே இல்லா மேன்மை வினைகளே செய்ய வந்த
ஒருத்தரைப் பகைத்து மோதி உருத்துப்போர் செய்ய வைத்தே
மறுத்தவர் எல்லா ரையும் மனம்மாற இறைசெய் தானே! 38

பலர் பலவகையில் வந்து சேர்ந்தனர்

உண்மையை வேண்டி வந்தார் ஒரு சிலர்; அண்ணல் செய்யும்
நன்மையை வேண்டி வந்தார் நனிபலர் வான வாழ்வின்
நுண்மையை வேண்டி வந்தார் நொந்தவர் பலரோ இந்த
மண்மையில் விண்மை காணும் மனத்தொடும் விரும்பி வந்தார். 39

தவறுணர்ந்து வந்தனர்

உதவிகள் கேட்டு வந்தார் ஒட்டியே வந்தார் நல்ல
பதவிகள் கேட்டும் வந்தார் பாதையில் தவறி விட்டோம்
கதவுகள் இல்லா நெஞ்சுள் கறைகளே நுழையக் கெட்டோம்
இதயமே தருக என்றும் இயம்பியே வந்தார் பல்லோர்; 40

காண வந்தவர் கறை நீங்கினர்

பாரசீ கத்தில் ஏமன் பகுரைனில் சிரியா மண்ணில்
ஈராக்கு நிலத்தில் எல்லாம் இருந்தவர் முசுலிம் ஆனார்;
ஆரவர் இந்த நல்ல அற்புதம் செய்தார் என்று
நேரிலே காண வந்த நெஞ்சரும் இசுலாம் ஆனார். 41