பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்475


தம்மக்களுக்கும் நன்னெறி கூறினார்

தாமுடன் பட்டுச் சேர்ந்த தன்மைபோல் தம்மினத்து
மாமுது மக்க ளையும் மகம்மது நெறியில் உய்க்கக்
காமுறு மனத்தராகிக் கவின்தாயிப் அடைந்து “தீமை
ஆம்முன்னே மக்காள்! நீவிர் அன்பினை மதிப்பீர்! என்றார். 84

மக்கள் பகைத்தனர்

“பித்திவன் உற்றா னோஇப் பேதையான்?” என்று பேசிக்
“கத்தியே நமது நெஞ்சைக் கலக்குகின் றானே” என்றும்
முத்தெனக் கரியைக் காண முழுப்பொய்யே விரிக்கின் றானே
குத்துவோம் இவனை என்றும் கூடினார் நின்றோர் ஆங்கே. 85

இவனைப்பேச விட்டால் அழிந்து விடுவோம்

உருவமே இல்லை யாமே ஒரே ஒரு கடவு ளாமே
இருவரை மூவரைத்தாம் இவனிங்கே ஏய்க்கக் கூடும்
தெருவரை இவனை விட்டால் தீர்ந்தது நமது பாடு
கருவறுத் திடுவோம் என்று கத்தினர் அவ்வூர் மக்கள்; 86

அடுத்தநாள் பாங்கு கூறினார்

அடுத்தநாள் காலை வெய்யோன் அருங்கதிர் விரிக்கும் முன்னே
எடுத்ததோர் கொள்கை நாட்ட இனியவர் விரைந்து சென்று
வடுத்தவிர் தமது வீட்டில் வாய்த்ததோர் முகட்டில் நின்று
விடுத்தனர் காலைப் “பாங்கு” வெண்கலத் தொலியைப் போலே! 87

அம்பினும் கொடியர் வந்தார்

கணீர் கணீர் எனவே “பாங்கு” காதினை அடைந்த போது
தனித் தனி யாகச் சென்ற தகீப்இன மக்கள் கூடி
இனி இனி இவனை விட்டால் இனிதில்லை என்று பேசி
அணி அணியாக நின்றே அம்பைமேல் எய்தார் ஆங்கே! 88

என்னை இசுலாமாய் அடக்கம் செய்க

ஆங்கொலிப் பாங்கு சொன்ன அன்பரும் பட்டு வீழ்ந்தார்
தேங்கியே சுற்றி நின்று தேம்பிய சுற்றத் தார்முன்
“ஓங்குசீர் இறையவன்முன் உடலதன் குருதி வைத்தேன்
ஈங்குநீர் எனது மெய்யை இசுலாமாய் அடக்கம் செய்க”. 89