பக்கம் எண் :

476துரை-மாலிறையன்

இவ்வகையிலும் இசுலாம் தழைத்தது

எனஉயிர் விட்ட பின்னே ஏங்கியே நின்ற பல்லோர்
மனமொழி செய்கையாலே மதிப்புடன் வாழ்ந்து நந்தம்
இனம்உயர் வடைவ தற்கே இன்னுயிர் நீத்தார் நாமும்
முனம்அந்த நபிபெம் மானின் மொழிவழி நடப்போம் என்றார். 90

நாயகத்தை நேரில் காணச் சென்றனர்

தகுநல முடிவு செய்த தகீப்எனும் கூட்டத் தார்கள்
முகமதி யர்களாக முறையுடன் மாற எண்ணி
முகம்மது கோமான் தம்மை முன்சென்று காண்போம் என்று
மிகுநல மதினா நோக்கி மேவினார் மேன்மை கொண்டே; 91

இதுவே நன்னெறி

அன்னவர் தம்மை அன்பே அணிமணி வேந்தர் நோக்கிப்
“பன்னருஞ் சிறப்பு மிக்க பண்புடன் வந்துள்ளீர்கள்
நன்னர்நம் இறைவன் மாண்பை நல்வனம் புகழ்தல் ஒன்றே
பொன்னமர் வாழ்க்கை காணும் புகழ்நெறி” என்று சொன்னார். 92

எங்களுக்கென்று சில பழக்கங்கள் உண்டு

மாறிய மனத்த ராக வந்தவர் நபிகளார்முன்
கூறிய செய்தி: ஐய! கூட்டமாய் வந்து சேர்ந்தோம்
வேறியல் வாழ்க்கை வாழ்ந்து விழித்தனம் என்ற போதும்
பாரினில் எங்கட் கென்று பழக்கங்கள் சிலஇங் குண்டு; 93

ஒழுக்கக் கேடுகள் நடக்கும்

மணம் புரி யாம லேயே வாழ்கிறோம் பல்லோர் எங்கள்
முனம் அந்த ஒழுக்க வாழ்வு முறையில்லை; அதனால் எங்கள்
மனம் தேர்ந்த ஒழுக்கக் கேட்டை மறுத்திடல் ஆகா தென்றும்
நினைவிலும் பணிவே றில்லா நிலையினோம் ஆதலாலே. 94

வட்டிகள் வாங்குவோம்

வட்டியே வாங்கும் வாழ்க்கை வாழ்கிறோம் அந்த வாழ்வும்
அட்டி இல்லாத வாறே அமைந்திட வேண்டும் என்றும்
மட்டிலா தெங்கள் மண்ணில் வளர்கொடி முந்திரிக்கே
ஒட்டிய தொழிலாய் ஆன ஒருதொழில் மதுவுண்டாக்கல்; 95