பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்477


ஒப்புக்கொண்டால் முசுலீம் ஆவோம்

இதனையும் செய்ய எம்மை இடைமறித் திடுதல் வேண்டா;
முதன்முதல் நாங்கள் சொன்ன மூன்றெனும் கோரிக்கையை
இதயத்தால் ஒப்புக் கொண்டால் இசுலாமாய் ஆவோம் இன்றே
இதனொடும் மற்றும் ஒன்றை ஏற்றிட வேண்டும் என்றார்; 96

உருவச் சிலைகளை உடைப்போம்

வழிவழி யாக யாங்கள் வணங்கிடும் உரு “லாத்” ஆகும்
எழிலான அதனை மேலும் என்செய வேண்டும்? என்றார்;
“அழிவான நெறியைக் காட்டும் அதனைநான் உடைப்பேன்” என்று
பழியான பாதை நீக்கும் பரமனின் தூதர் சொன்னார்; 97

கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை

முன்வைத்த கோரிக் கைகள் மூன்றையும் இறைவன் ஏலான்;
பின்வைத்த கோரிக் கையும் பிழையேதான் என்ற போதும்
மண்வைத்த உருவை நாமே மண்ணிலே உடைப்போம்; நீங்கள்
கண்வைத்துப் பார்த்தி டுங்கள் கையினால் தொடவே வேண்டாம்; 98

நாங்கள் முசுலீம் ஆகி விட்டோம்

எனச் சொல்லி அனுப்புங் காலை எல்லாரும் ஒப்புக் கொண்டும்
“முனம் நின்று தொழுகை செய்யும் முறைமட்டும் வேண்டா” என்றார்;
“கனவிலும் இக்கோ ரிக்கை கருதாதீர்” என்றார் செம்மல்;
அனைவரும் முசுலீம் ஆனோம் ஆனோம் என்றுரைத்துச் சென்றார்; 99

உருவச் சிலைகள் உடைக்கப்பட்டன

அகம்மாறி நன்மை யுற்ற அபாசுபி யானை மற்றும்
முகைறாவை அழைத்து “நீங்கள் முன்சென்று தாயிப் மண்ணில்
தொகையான சிலையை எல்லாம் தூளாக்கி வருக” என்றார்
தகையாளர் இருவர் தாமும் தாயிபை அடைந்தார் ஆங்கே; 100

இவ்வகையிலும் இசுலாம் தழைத்தது

சிலைகளை உடைக்கும் போது சிந்திய மூக்குப் பெண்கள்
தலைவிரித் தாடி ஆடித் தம்துயர் தெரிவித்தார்கள்
மலைவிரித் தரிய தீனை மலர்வித்த இறைவ னாலே
இலைவிரித் தெழும்சோ லைபோல் இசுலாமே தழைத்த தாங்கே! 101