|
நசுறான் மக்களுக்கு அறிவுரை
மக்காவின் அருகில் உள்ள மாநிலம் நசுறான் ஆகும்
அக்காலம் அந்த மண்ணில் அருங்கிருத் துவக்கொள் கையார்
முக்காலும் இறைஅச் சத்தில் மூழ்கிய வண்ணம் வாழ்ந்தார்
தக்காரும் அன்னா ருக்குத் தம்நெறி எடுத்துச் சொன்னார். 102
கிருத்துவர் செபம் செய்தனர்
பெருமானின் நெறியைக்
கேட்டுப் பெருகிய நசுறான் மக்கள்
வருகையை அறிந்தும் ஆங்கே வந்தாரைப் பள்ளி வாசல்
அருகிலே இருக்கச் செய்தும் அவர்தொழு கைமேற் கொண்டார்;
கிருத்துவ நெறியார் தாமோ கெழுநலச் செபம்செய்
தாரே! 103
தோழர்கள் வெகுண்டனர்
அவ்வகை மணித்த வத்தை
ஆங்கவர் புரியும் போதில்
அவ்விடம் வந்த தோழர் அவர்தவச் செயலைக் கண்டு
கொவ்வைபோல் கண்சி வந்து கொடுஞ்சினம் கொண்டு “நீங்கள்
எவ்வணம் இவ்வி டத்தில் இச்செபம் செயலாம்?”
என்றார்; 104
அண்ணலார் இங்கேயே செபியுங்கள்
என்றார்
சினந்தெழுந் தவர்கள்
தங்கள் சீற்றத்தை நேரில் கண்டு
மனந்திடுக் கிட்டும் பொல்லா மனந்திறந் தெழுப்ப வந்தோர்
மணந்தரும் மொழியே பேசி “மாந்தரே! இவ்விடத்தில்
நினைந்துநும் இறையை வேண்டி நெடுஞ்செபம் முடிப்பீர்”
என்றார். 105
அண்ணலாரின் பொறுமை
புறநெறி யாளர் தாங்கள் போற்றிடும் நெறியில் நின்றே
அறநெறி யாளன் ஆன ஆண்டவன் தன்னை வேண்ட
உறவுகொண்டு இசைவு தந்த ஒளியவர் நாய கத்தின்
நிறைந்தசீர் பொறுமை முன்னே நேர்நிற்பார் எவரும்
உண்டோ? 106
பாதுகாப்பு வரி கொடுக்க
இசைந்தனர்
நெறியினை மாற்றிக் கொள்ளா நெஞ்சுடன் வந்தோர் முன்னே
நெறிநலம் வாய்ந்த தீனின் நிலையினை விரித்துச் சொன்னார்
வரியினை மட்டும் தாங்கள் வழங்கிட ஒப்புக் கொண்டே
உரியதம் நசுறான் மண்ணை உடன்ஏகிச் சென்றார்
அன்னார்; 107
|