பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்479


இவ்வகையிலும் இசுலாம் தழைத்தது

தண்ணிய நெஞ்சத் தோடு தமதிடம் சென்ற மக்கள்
விண்ணையும் விண்ணின் மாண்பு விரிவையும் எண்ணிப் பார்த்து
மண்ணிலே நெறிகளுக்குள் மாட்சிமை பெற்ற திந்தக்
கண்ணிகர் இசுலாம் என்று கருதியே முசுலீம் ஆனார். 108

அண்ணலை மாய்க்க வந்தனர்

கீசுஐவான் குலத்தார்க் குள்ளே கேடுசெய் பண்பு கொண்ட
மாசுளார் ஒருவர் ஆமிர் மற்றவர் அர்பத் தானார்
ஈசனின் தூதர் கோனை இருவரும் மாய்த்து வெல்லப்
பேசினார் தமக்குள் பின்னர்ப் பெருமான்முன் ஆமிர் போனான்; 109

அர்பத் வெட்ட முன் வந்தான்

ஆமிர்தான் அண்ணலோடும் அளவளா விடும் அந்நேரம்
தீமையில் வல்ல அர்பத் திடுமெனத் தோன்றி அன்னார்
தாம் வீழ வெட்ட வேண்டும்; தகாதஇத் திட்டத்தோடு
நாமலர்ந் திருந்த அண்ணல் நபியாரை நோக்கிப் போனான்; 110

ஓங்கிய கை வெலவெலத்தது

ஏந்திய கத்தி கையில் இருந்திட அருகில் நின்று
பூந்தளிர் முகத்தி னாரைப் போக்கிட முயற்சி செய்த
மாந்தனோ கை அசைக்க மாட்டாமல் மலைத்து நின்றான்
ஏந்தலோ அறிந்தும் ஏதும் நடவாத போலி ருந்தார்; 111

ஆண்டவனை வேண்டினார்

தீயவர் இரண்டு பேரும் திருநபி தம்மைக் கொல்ல
ஆயவை அனைத்தும் செய்தே அமைந்தனர்; பெருமா னாரோ
தூய என் இறைவா! உன்றன் துணையினால் இவர்கள் தீமை
மாயவே வேண்டு மென்று மனத்தினால் தொழுது கொண்டார்; 112

தீயவன் தொற்று நோய் கொண்டான்

வேண்டிய அந்தப் போழ்தே வெடுக்கென ஆமிருக்கு
நீண்டமெய் சோர்ந்து போகும் நிலையிலே தொற்று நோய்தான்
தோன்றிடச் செய்தான் வானத் தூயவன்; நோயி னானும்
மாண்டு கீழ் விழுந்தான்; கண்ட மக்களோ வியந்து போனார்; 113