|
இவ்வகையிலும் இசுலாம்
தழைத்தது
இருவிழி யாலே கண்டோம் இசுலாமின் கொள்கை தானே
பெருமை கொள் வழியே என்று பேசியே தமக்குள் தேர்ந்து
ஒருவழி இதனை விட்டால் உயர்வழி இல்லை என்றே
பெருகிய கூட்டமாகப் பெருமானை ஒன்றி னாரே. 114
உட்பகை கொடியது
நெஞ்சுளே உடன்பா டில்லார் நெருங்கியே வாழும் வாழ்க்கை
நஞ்சுள பாம்புக் கூட்டம் நடுவிலே வாழ்தல் ஒக்கும்
அஞ்சியே வாழத் தக்க அரும்பகை செயும் கேட்டையும்
மிஞ்சிய தீமை செய்யும் மேவிய உட்பகையே! 115
உட்பகையால் நல்ல
குடும்பமும் அழியும்
எள்ளினும் சிறிய தாக இருக்கும்உட்பகை என் றாலும்
முள்ளினும் கேடு செய்து முழுவதும் குடிகெடுக்கும்
உள்ளதோர் இரும்பு முற்றும் உரசிடும் அரத்தால் தேயும்
வல்லமைக் குடும்பம் தானும் வருத்தும் உட்பகையால் மாயும். 116
உட்பகை கனிந்து பெரியதாகி
அழிக்கும்
செப்பினைப் போல ஒன்றித் தெரியினும் உட்பகை யாம்
தப்பினால் குடும்பத்தார்கள் தமக்குள்ளே பொருந்த மாட்டார்
வெப்பம்போல் கனிந்து தீமை விளைத்திடும் உட்பகையால்
எப்போதும் குடும்பத்துக்கே இன்னலே தொடர்ச்சியாகும். 117
உட்பகை வாளினும் கொடியது
கூரிய வாளோ நேராய்க் குத்திடும் உட்பகையோ
நேரிலே உறவைப்போல நெருங்கியே தீமை செய்யும்
நீரும்நல் நிழலும் கூட நீர்மையற்றின்னல் செய்தால்
ஆருமே வெறுப்பர் சுற்றம் ஆனதும் பகைபோல் ஆகும். 118
உட்பகைவர் அண்ணலாரை
அழிக்க நினைத்தனர்
இவ்வகை உட்பகைதான்
இதயத்தில் கொண்ட பல்லோர்
எவ்வகை இசுலாம் தன்னை ஈங்குநாம் அழிப்ப தென்றே
அவ்விய நெஞ்சத் தோடும் அன்பர்போல் ஒருங்கிருந்தார்
இவ்வகை வஞ்ச கர்கள் இயற்றினார் கொடிய
தீமை; 119
|