அவர்களுள் ஒருவன் அப்துல்லா
இப்னு உபை
அகத்திலே அன்பில்லாத
அப்துல்லா இப்னு உபையே
பகைதனை மறைத்துக் கொண்டு பரிவொடும் நடப்பதைப் போல்
வகைவகை யான தீமை வளர்த்தனன்; பகைவர்தங்கள்
அகம்மிக மகிழப் பண்ணி அவனும்தான் மிகமகிழ்ந்தான்; 120
உட்பகையால் படைவலிமையை
அழித்தான்
போர்ப்படை வரும்போ தெல்லாம் புல்லியோன் உட்பகை தான்
ஆர்ப்புற முசுலிம் தங்கள் அரும்படை வலிமை நீக்கி
நேர்ப்புறப் படைகள் தங்கள் நெடுவலி பெருகச் செய்தான்
வார்ப்புறும் தீமை எல்லாம் வளர்த்திடும் கொடுமை யோனே! 121
வஞ்சகமாய்ப் பள்ளி வாசல்
கட்டினார்
கொடுமையே செய்யும் நோக்கம் கொண்டபொய் வஞ்சகர்கள்
நெடுநிலைப் பள்ளி வாசல் நேரினில் கட்டி வைத்தார்;
வடுநிலை யாளர் தங்கள் வாய்மை இல்லாத நோக்கம்
கெடுமென இறைவன் கூறக் கேட்டனர் நபிநல் லாரே! 122
இறைவன் ஆணையால் இடித்தார்
கட்டிய பள்ளி வாசல் கட்டடம் தன்னை அண்ணல்
ஒட்டியே இடிக்கச் சொன்னார்; ஒட்டாத பகைவர் கூட்டம்
கட்டிய மனக்கோட் டைகள் கரைந்து கீழ் விழுதல் போல
வட்டமாய் எழுந்த பள்ளி வாசலும் விழுந்த தன்றே! 123
கொடிய நோயால் வருந்தினான்
அஞ்சவே தக்க வஞ்ச அகத்தவன் கொடிய நோய்தான்
மிஞ்சவே உள்ளம் மாறி மிகுநலப் புதல்வன் தன்பால்
கெஞ்சினான், “மகனே! யானும் கெடுதியே செய்து வாழ்ந்தேன்
வஞ்சமே உருவாய்க் கொண்டேன் வளர்பழி சேர்த்துக்
கொண்டேன்; 124
தீயவன் வேண்டிக் கொண்டான்
ஆவியே விடுவேன் இன்னே
அன்பனே! நீபோய் அண்ணல்
கோவின்முன் இதனைச் சொல்வாய்; கொடியஎன் உடலின் மீது
தூவியல் பெருமான் தங்கள் தூயநல் ஆடை போர்த்தி
நாவினால் இறைமுன் வேண்டி நன்முறை அடக்கம் செய்ய;” 125
|