பக்கம் எண் :

482துரை-மாலிறையன்

அவன் வேண்டுதலை அண்ணலார் நிறைவேற்றினார்

என்றனன் ஆவி விட்டான் எழில்மணிப் புதல்வர் தாமும்
நன்றெனக் கூறி அன்பு நபிகளார் தம்பால் சொன்னார்
ஒன்றெனும் இறைவன் நோக்கம் உலகிலே இயற்ற வந்தோர்
சென்றுதம் ஆடை போர்த்திச் சிறப்புற வேண்டி நின்றார்; 126

தோழர்கள் தடுத்தனர்

தோன்றலைச் சூழ்ந்து நின்ற தோழருள் உமர்நல்லாரும்
தோன்றியே தடுத்து “நீவிர் தூயராய் இருந்தும் அன்பு
தோன்றாத உபைக்குச் செய்யும் தூயதாம் வேண்டல் நந்தம்
ஆன்றசீர் மாண்பை எல்லாம் அடியோடும் அழிக்கும்” என்றார்; 127

இவனுக்குக் கழுவாயே இல்லை என்றனர்

“எழுபது முறை கேட்டாலும் இறைமன்னிப் பருள மாட்டான்
வழுவதே கொண்ட இந்த வஞ்சகன் தனக்கு நீவிர்
தொழுவதால் பயனே இல்லை தொடராதீர்” என்றும் மேலும்
“கழுவாயே இல்லை இந்தக் கறையானுக்” கென்றும் சொன்னார்; 128

இறைவன் தீர்ப்பே இறுதியானது

இரக்கமே உருவாய்க் கொண்ட எழில்நபி யாரும், “அன்ப!
புரக்கவே வந்தோம் அன்றிப் பொய்யினைப் பரப்ப இல்லை
உரக்கவே இறைவன் முன்னே உருக்கமாய் வேண்டி நின்று
சிறப்பதே நமது நோக்கம் செய்வதோ அவன்தான் அன்றோ? 129

நாம் மன்னிப்போம் நடப்பது நடக்கட்டும்

“மன்னிக்க அவன்தன் நோக்கில் மலர்ந்திடும் விருப்பம் என்றால்
மன்னிப்பான் இல்லை என்றால் மண்ணிலே இவர் போகட்டும்
எண்ணிப்பார்” என்று கூறி இதயநன் மலரைப் பூக்கக்
கண்ணாற்பார்த் திசைகேட்டாரோ கனிந்துமுன் பணிந்தார் அம்மா. 130

எங்கும் பாங்கொலி ஒலித்தது

எங்கெங்கும் இசுலாம் பொங்கி இனித்தது மக்கள் உள்ளம்
மங்கிய நிலைமை மாறி மலர்ச்சியாய்ப் பொலிந்த தின்பம்
தங்கிய கொள்கை தானே தவழ்ந்தது வையம் எல்லாம்
எங்கணும் இறைவன் சீரே இயம்பிய பாங்கு கேட்டார். 131

***