பக்கம் எண் :

48துரை-மாலிறையன்

ஆபுவா நகரில் காய்ச்சலொடு தங்கினார்

அரியமாண் பன்னைமான் கன்றி னோடும்

ஆகாத காட்டதனை நீங்கல் போல

உரியதாம் ஊர்நோக்கிப் போகும் காலை

உற்றதொரு சிற்றூராம் அபூவா என்னும்

விரிஒளிசூழ் நல்லூரில் தங்கி னார்கள்

விளங்கொளிச்சீர் ஆமினாவின் மலர்மென்மேனி

எரியன்ன காய்ச்சலினால் நடுங்கக் கண்டே

ஏந்துமுகம் மதுநெஞ்சம் வாடி னாரே! 52

முகம்மதுவுக்கு ஆறுவயதே ஆனது அன்னை மறைந்தார்

உற்றவர்கள் ஆருமிலாச் சிற்றூர் தன்னில்

ஒப்பில்லாப் பருவம் ஆண்டும் இருப தாகப்

பெற்றவராம் ஆமினாவின் காய்ச்சலுக்குப்

பெருகுதவி செய அருகில் எவரும் இன்றிக்

குற்றமற்ற வயதாறும் திங்கள் ஒன்றும்

கொண்ட முகம் மதுவேதாம் சூழ்ந்தி ருக்க

நற்றவத்துத் தாயவர்தம் ஆவி நீங்கி

நாட்டமுடன் வீட்டுலகை நாடிற் றாலோ. 53

அன்னை ஆமினாவின் உடல் அடக்கம்

அம்மாவின் ஆருயிர்தான் இல்லை என்றே

அகம்மதுவின் உளம்துடிக்கச் சிற்றூர் மக்கள்

தம்மவர்க்குள் பொறுப்புடையார் நெருங்கி வந்து

தாயற்ற குழந்தையினைத் தேற்றித் தேற்றிச்

செம்மையுற மறைநெறியில் கண்டால் போன்ற

சிறப்புகளை எலாம் செய்தே இறுதி யாக

அம்மாவின் புனித உடல் அடக்கம் செய்தே

அபூவாவின் மக்களெலாம் புகழ்பெற் றாரே! 54