பக்கம் எண் :

484துரை-மாலிறையன்

மன நிறைவு கொண்டார்

வியன்பணி முடிந்த தந்த விண்பனி நிறைவாய்ச் செய்தோம்
பயன்பட வாழ்ந்தோம் தெய்வப் பண்பினை வளர்த்து விட்டோம்
செயல்பட வந்த வண்ணம் செயல்பட்டோம் எனவே எண்ணி
நயம்பட மொழிந்த அண்ணல் நபியாரும் நிறைவு கொண்டார்; 6

இறுதிப் புனிதப்பயணம் மேற்கொண்டார்

புலம்பெயர்ந் தொருபத் தாண்டில் புகழ்துல்க அதாமா தத்தில்
நிலம்புகழ் மதினா தன்னை நீங்கியே மக்கா கூடி
நலம் பெறு புனிதம் மிக்க நற்பயணம் மேற்கொண்டு
வலம்தர முடிவு செய்தார் வாய்மைசேர் காரிஅந்நாள்; 7

பிராட்டியார்கள் அனைவரும் போயினர்

அண்ணலார் புனித மிக்க அரியநற் பயணம் போக
அண்ணலார் பிராட்டி யார்கள் அவர்தமைத் தொடர்ந்து போக
வண்ணமாய் அண்ண லாரின் வழிதொடர்ந் தவர்கள் போக
மண்ணிலே மக்கா மாண்பு மல்கியே விரிந்த தாங்கே! 8

இறைவனைப் புகழ்ந்து சென்றனர்

“இறைவனே! உன்னைக் காண எல்லாரும் அணிய மானோம்
இறைவனே! உனக்கு நல்ல இணைவைக்க எவரும் இல்லை
இறைவனே! யாங்கள் பெற்ற இசைகளும் பேறும் யாவும்
முறையொடும்! உன்ற னுக்கே முழுவதும் தந்தோம்” என்றே; 9

வழி நெடுகத் தொழுகை முடித்தனர்

“இதோ! இதோ! இறைவா உள்ளேன்!” எனும்பொருள் மிக்க “லப்பைக்”கு
இதம் தரும் இனிய சொல்லை இயம்பியே எவரும் போய்அற்
புதம்தரும் இனிய வானப் புகழ்தரும் பள்ளி வாசல்
முதல்தரும் தொழுகை யாவும் முடித்தன ராகச் சென்றார்; 10

ஒன்பதாம் நாள் மக்காவுக்குச் சென்றார்

ஒன்பது நாள்கள் மக்கள் உயர்நிலம் நோக்கி நோக்கி
நண்பரோ(டு) இறைவன் மீதில் நட்பினை நட்டவாறே
மன்பதை வாழ்வுக் கான வாய்மையை நிலை நிறுத்தப்
பண்புடன் தோழ ரோடும் பணிவுற விரைந்து சென்றே! 11