பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்487


அடிமை மேல் அன்பு காட்டுக

“அடிமைஎன் றெவரும் இல்லை ஆண்டவன் பார்வை முன்னே
படிந்துள நாம்எல் லாரும் பகையிலாச் சமமே ஆவோம்;
ஒடிந்துளம் வாடும் வண்ணம் உணவையோ உடைதன் னையோ
கடிந்து முன் கொடாது போனால் கடவுளின் சினம்நம் மேலாம்; 24

மன்னியுங்கள்

குற்றமே செய்தால் கூடக் குறைவின்றி மன்னியுங்கள்;
முற்றுமே குற்ற மானால் முன்னிருந் தொதுக்கி டுங்கள்;
அற்ற ஓர் அடிமை கூட ஆண்டவன் அடியான் தானே
மற்றுமேன் அடிமை என்று மாந்தனை வதைக்க வேண்டும்?” 25

அரபியர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் அல்லர்

மற்றவர் தமையும் மிஞ்சும் மாண்புளார் அரபி யர்கள்
நற்றவம் உடையார் என்று நவிலுதல் தவறு மற்றோர்
குற்றமே உடையார் என்னும் கொள்கையை இறைவன் ஏலான்
உற்றவர் எவரும் ஒத்த உடன்பிறந் தாரே ஆவார். 26

உங்களுக்குத் திருக்குர்ஆனை விட்டுச் செல்கிறேன்

உங்களுக் குரிய தாக ஒன்றினை விட்டுச் செல்வேன்
செங்கனி வாயால் ஓதிச் சிறப்பினை அடைவதற்கே;
நங்கவின் இறைவன் தந்த நயவுரை திருக்குர் ஆனை
எங்கணும் எவரும் போற்றி எந்நாளும் தொடர வேண்டும். 27

இந்த மூன்று பண்புகளைப் பெறுங்கள்

தூயதாய் எண்ணம்; நன்மை துளங்கிடும் விருப்பம்; என்றும்
நேயமாய் ஒன்றுபட்டு நிலைபெறும் வாழ்வே என்னும்
ஆயஇம் மூன்று நோக்கம் அமைவதால் உங்கள் உள்ளம்
தூயதன் மையாய் என்றும் சுடர்விடும் இம்மண் மேலே! 28

என் கடமையை நிறைவேற்றினேனா?

வந்தவர் கேட்டீர் இங்கு வாராத பேர்க ளுக்குத்
தந்தஇச் செய்தி தன்னைத் தக்கவாறு எடுத்துச் சென்று
தந்திடில் சிறப்புக் கொள்வீர் தரையினில் வந்த எற்குத்
தந்தநற் கடமை தன்னைத் தந்தேனா? எனக் கூறுங்கள்; 29